tamilnadu

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் மெகா மோசடி

சிபிசிஐடி விசாரணை நடத்த  சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை,செப்.22- கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடனில் நடை பெற்றுள்ள மெகா முறைகேடுகள் குறித்து சிபி சிஐடி விசாரணை நடத்த வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி  யுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர்  40 கிராம் அளவுக்கு கூட்டுறவு வங்கிகளில் நகை  ஈடாக பெற்றுள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப் படும் என அறிவித்தார். இது தொடர்பாக நிலுவை விபரங்களை ஆய்வுக்குட்படுத்திய போது ஏராளமான தவறுகளும், முறைகேடுகளும் நடந்துள்ளதாக கூட்டுறவு பதிவாளர் அவர்கள் வெளியிட்டுள்ள கடிதத்தின் மூலம் தெரிய வருகிறது. அதாவது, ஒரே நபர் 50-க்கும் மேற்பட்ட கடன்களின் மூலம் 1 கோடி ரூபாய்க்கு மேல் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. நகைக் கடன்கள் ஒரு நபருக்கு அதிகபட்சமாக 20 லட்சம்  ரூபாய் வழங்கலாம் என்ற விதியினை மீறி  இத்தகைய பெருந்தொகை தமிழகம் முழுவதும் பலருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அந்தி யோதயா அன்ன யோஜனா (நலிந்தோர் உதவித் திட்டம்) திட்டத்தின் கீழ் அடையாளப்படுத்தப் பட்டுள்ள பலருக்கு பல லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. போலி நகைகளின் மீதும் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. நகைகள் இல்லா மலேயே அடமானம் வைக்கப்பட்டதாக கடன்கள்  வழங்கப்பட்டுள்ளன.

இத்தகைய முறைகேடுகள் மூலம் சில ஆயிரம் கோடிகள் கடன் பெறப்பட்டு  தற்போது கடன் தள்ளுபடி மூலம் இவர்களுக்கு பலன் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. நகைக் கடன் என்ற பெயரில் கூட்டுறவு சொசைட்டிகளில் கூட்டுக் கொள்ளை நடைபெற்றுள்ளதோ என சந்தேகம் ஏற்படுகிறது. இதை அனுமதிப்பது கூட்டுறவு நிறுவனங்களை ஒட்டுமொத்தமாக திவால் நிலைக்கு தள்ளிவிடும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம். ஏற்கனவே, பயிர்க் கடன்கள் வழங்கப் பட்டதில் 25,733 கடன்களில் 2393 கோடி ரூபாய்  தவறாக வழங்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதை கூட்டுறவுத்துறை அமைச்சர் சட்ட மன்றத்தில் தெரிவித்துள்ளார். தற்போது நகைக்  கடன் வழங்கப்பட்டுள்ளதிலும் மெகா முறை கேடு நடந்துள்ளது பேரதிர்வை அளிக்கிறது. கடந்த அஇஅதிமுக ஆட்சியில் நடை பெற்ற இத்தகைய முறைகேடுகள் குறித்து  முழுமையான விசாரணை நடத்தி இம்முறை கேடுகளில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் பாரபட்சமற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் துறைவாரியான விசாரணை என்பதற்கு மாறாக இத்தகைய முறைகேடு கிரிமினல் குற்றவியல் தொடர்பானது என்பதால் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு முதலமைச்சர் உத்தரவிட வேண்டுமென வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;