tamilnadu

img

ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு நிகழ்ச்சி... கல்லூரி மாணவர்களை கரைவேட்டி கட்டி வர கட்டாயப்படுத்தும் அதிகாரிகள்....

சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வின் நினைவிடம் திறப்பு நிகழ்ச்சிக்கு  அரசுக்கல்லூரி மாணவ,மாணவிகளை  கரை வேட்டி, சேலை கட்டி வர கட்டாயப்படுத்தும் உயர்கல்வித்துறை அதிகாரிகளின் செயலை இந்திய மாணவர் சங்கம் கண்டித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு நிகழ்ச்சி சென்னையில் ஜனவரி 27 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஆகவே அன்று சென்னையில் உள்ள அரசுக்கல்லூரி மாணவ, மாணவியர்கள் அதிமுக கட்சியின் கரை வேட்டி, சேலை அணிந்து வரவேண்டும் என உயர்கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்களிடம் கட்டாயப்படுத்தி, வற்புறுத்துவது கண்டிக்கத்தக்கது. ஆசிரியர்களை,மாணவர்களை தன் அதிகாரத்தால் கல்வித்துறை அதிகாரிகள் அதிமுக கட்சி உறுப்பினர்களாக மாற்ற முயற்சி செய்வது அதிகார துஷ்பிரயோக மாகும். உடை அணிவது அவரவர் விருப்பம்.இதனை கட்டாயப்படுத்துவது அநாகரிக மானது.  ஜனநாயகத்திற்கு எதிராகவும், ஆளும்கட்சிக்கு ஆதரவாகவும் செயல்படும் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 கொரோனாவை காரணம் காட்டி கடந்த 11 மாதங்களாக கல்விநிலையங்களை பூட்டி தற்போது வரை அனைத்து கல்விநிலை யங்களையும் திறக்காமல், மாணவர்களின் கல்வி குறித்து கடுகளவு கூட  அதிமுக அரசு கவலைப்படவில்லை. இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாநிலம்முழுவதும் போராட்டம் நடத்திய பின்பே 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போதுவகுப்புகளை நடத்தி வருகிறது. குறைக்கப்பட்ட பாடத் திட்டம் என்ன?  நோய் தொற்று ஏற்பட்டால் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ ஏற்பாடு என்ன? புலம்பெயர் தொழிலாளர் குழந்தைகளை கொண்டு வர என்ன திட்டம்?  கல்லூரிகளை திறப்பது எப்போது? என பல்வேறு கேள்விகளுக்கும் அதிமுக அரசு பதிலளிக்கவில்லை. 

இந்நிலையில்  மாணவர்கள், ஆசிரியர்களை அதிமுக கட்சியின் கரை வேட்டி, சேலை கட்டிவரச் சொல்வது அராஜகம். ஆளும் கட்சியின் இச்செயல் சட்டவிரோத மானது, உள்நோக்கம் கொண்டது. இதனை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். கரை வேட்டி,சேலை கட்டச் சொல்லி மிரட்டும் ஆளும்கட்சி கல்வி அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தமிழகம் முழுவதும் அரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்துவோம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
 

;