tamilnadu

img

கடன் தள்ளுபடியிலும் முறைகேடா?

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் வீசிய நிவிர் மற்றும் புரவி புயல் ஜனவரிமாதம் எதிர்பாராமல் பெய்த கனமழை ஆகியவற்றின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான ஏக்கரில் விவசாயம் முற்றிலும் அழிந்து போனது. இதனால் விவசாயிகள் மிகப்பெரும் இழப்புக்கு ஆளாகினர்.

பட்டகாலிலேயே படும் கெட்டகுடியே கெடும் என்ற பழமொழிக்கேற்ப விவசாயிகள் மீண்டும் மீண்டும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், பயிர் பாதிப்புகளுக்கு முழுமையான இழப் பீடு வழங்குவதுடன் விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளின் சார்பில் வலியுறுத்தி போராட்டங்களும் நடைபெற்றன.இந்த நிலையில் விவசாயிகள் பெற்றபயிர்க்கடன் 12110.74 கோடி உடனடியாக தள்ளுபடி செய்யப்படுவதாகவும் இதனால் 1643347 விவசாயிகள் பயனடைவர்என்று முதலமைச்சர் சட்டப் பேரவையில் அறிவித்தார். இதில் சேலம், நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் மட்டும் தமிழ்நாட்டிலேயே மிக அதிகபட்சமாக 1356.03 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது பலவிதமான சந்தேகங் களை எழுப்பியுள்ளது. கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிக்குட்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 698.76 கோடி மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இதனால் ஆளுங்கட்சியினர் நிர்வாகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில்கடன் தள்ளுபடி செய்யப்பட இருப்பதைஅறிந்து கொண்டு மோசடியாக முன் தேதியிட்டு ஆளுங்கட்சியினர் கடன் பெற்றுள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவரே, மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் செயல்படுவதால் இத்தகைய மோசடிநடைபெற்றிருப்பதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை. முதலமைச்சரின் சொந்த மாவட்டத்
தில் நடந்துள்ள இத்தகைய முறைகேடுதொடர்பாக தமிழக அரசு நேர்மையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது. முறைகேடு நடைபெற்றிருந்தால் இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்யுமாறு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்  பொதுச் செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கையிலிருந்து...

;