tamilnadu

img

சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் கட்சிகள், சமூக அமைப்புகளும் இணைய வேண்டும்.... சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அழைப்பு......

சென்னை:
சாதிய ஏற்றத்தாழ்வு, சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் ஒன்றிணைய வருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறைகூவல் விடுத்தார்.
சட்டமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 130வது பிறந்த நாள் புதனன்று (ஏப்.14) நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சென்னை சைதாப்பேட்டை எம்.சி.ராஜா விடுதியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இந்தியாவில் சாதி ஏற்றத்தாழ்வு தொடர்கிறது என்பதை தொடர் நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன. தந்தை பெரியார், சிந்தனை சிற்பி சிங்காரவேலர் போன்ற சீர்திருத்தவாதிகள், பி.ராமமூர்த்தி போன்ற சமூக மாற்றப் போராளிகள் தோன்றிய தமிழகத்தில் இன்றைக்கும் சாதிய கொடுமைகள் கோலோச்சுகின்றன. சாதிய வன்மத்தோடு அரக்கோணம் அருகே 2 இளைஞர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். இது தமிழச்சமூகம் எந்த அளவிற்கு சீர்கெட்டுள்ளது என்பதற்கு சான்றாக உள்ளது.
தந்தை பெரியார் பெயரிலான சாலையின் பெயரை தமிழக அரசு மாற்றி அமைத்திருக்கிறது. அரசின் நடவடிக்கை வேதனையை தருகிறது. இந்த மோசமான நிகழ்வு கண்டிக்கத்தக்கது. சாதிய ஏற்றத்தாழ்வு, மதவெறி இல்லாத சமூகம், மனிதர்களை, உழைப்பாளிகளை நேசிக்கக் கூடிய சமூகத்தை உருவாக்கும் லட்சியத்தோடு பயணிக்க வேண்டி உள்ளது. இந்த பயணத்தில் அம்பேத்கரின் சிந்தனைகளை, கொள்கைகளை அமல்படுத்தும்.

தமிழகத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகள், சமூக ஒடுக்குமுறைகளை எதிர்த்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி வலுவாக நடத்தி வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, பிறசாதிகளை சேர்ந்தவர்களையும் ஒன்றுதிரட்டி மார்க்சிஸ்ட் கட்சி போராடி முத்திரை பதித்து வருகிறது. இந்தப் போராட்டத்தில் தமிழக அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் இணைய வேண்டும். இவ்வாறு கூறினார்.செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “நோய்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டுதான் மத வழிபாட்டு உரிமை இருக்க வேண்டும்.மதவழிபாட்டு உரிமையில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வருவதை தவிர்க்க முடியாது. கட்டுப்பாடில்லாமல் வழிபாட்டிற்கு கூடினால், வழிபாட்டில் இல்லாத மக்களும் தொற்றால் பாதிக்கப்படுவார்கள். எனவே, அவற்றை கட்டுப்படுத்த வேண்டும்” என்றார்.இந்நிகழ்வின்போது கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், சைதாப்பேட்டை பகுதிச் செயலாளர் ஜி.வெங்கடேஷ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர் ஜானகிராமன், மாவட்டச் செயலாளர் கே.மணிகண்டன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

படக்குறிப்பு : டாக்டர் அம்பேத்கரின் 130ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஏப்ரல் 14 (புதனன்று) சென்னை, சைதாப்பேட்டை, எம்.சி.ராஜா மாணவர் விடுதியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் அ. பாக்கியம் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

;