tamilnadu

img

மதவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் முன்னோடிகளின் படைப்புகளை ஆயுதமாக்குவோம்..... புகழஞ்சலி கூட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு...

சென்னை:
மதவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் முன்னோடிகளின் படைப்புகளை ஆயுதமாக்குவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

சமீபத்தில் மறைந்த ஆய்வாளர் தொ.பரமசிவம், கவிஞர் இளவேனில், எழுத்தாளர் காஸ்யபன், கவிஞர் நாகை காவியன், எழுத்தாளர் சோலை சுந்தரபெருமாள், எழுத்தாளர் மாதவன் ஆகியோருக்கு ஞாயிறன்று (ஜன.17) சென்னையில் புகழஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் சென்னை மாவட்டக்குழுக்கள் நடத்திய இந்த புகழஞ்சலிக் கூட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், மறைந்த ஆளுமைகள் அனைவருமே சமூக பிரக்ஞையோடு செயலாற்றியவர்கள். மதத்தையே அரசியலாக்கி கொண்டவர்கள் ஆட்சி செய்யும் இந்த காலத்தில், மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிக்க, பண்பாட்டு தளத்தில் பணியாற்ற மறைந்த படைப்பாளிகளை போன்ற பல படைப்பாளிகள் தேவைப்படுகிறார்கள்.  மதவாதத்திற்கு எதிரான மறைந்த  படைப்பாளிகளின் படைப்புகளை  ஆயுதமாகக் கொள்வோம் என்றார்.

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் படைப்பாளிகளை நோக்கி, ‘நீங்கள் யார் பக்கம்?’ என மாக்சிம் கார்க்கி கேள்வி எழுப்பினார். இன்றைய மதவாத ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் அதே கேள்வியை தமுஎகச-வும் எழுப்புகிறது என்றும் அவர் கூறினார்.இந்நிகழ்வில் கவிஞர் தணிகைச்செல்வன், சிகரம் ச.செந்தில்நாதன், கவிஞர் இரா.தெ.முத்து, மொழிபெயர்ப்பாளர் மயிலைபாலு, எழுத்தாளர் வீ.பா.கணேசன், கவிஞர் சி.எம்.குமார், விமர்சகர் மணிநாத், பத்திரிகையாளர் நாகப்பன், கவிஞர் வெ.ரவீந்திரபாரதி, திரைக்கலைஞர் பகத்சிங் கண்ணன் உள்ளிட்டோர் பேசினர்.

;