பட்டா கேட்டு பொன்னேரியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கோயில் நிலங்களில் குடியிருக்கும் அடிமனை பயனாளிகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி புதனன்று (பிப்.26), பொன்னேரியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோயில், வஃக்பு வாரிய நிலங்களில் திருப்பேர், நெய்தவாயில், சோழவரம் எஸ்பிகே நகர், அருமந்தை, மீஞ்சூர், தடப்பெரும்பாக்கம், சைனாவரம், நரசிங்கா புரம், மதுரவாசல் ஆகிய கிராமங்களில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பல தலைமுறைகளாக பட்டா இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். கோயில், மடம், வக்பு வாரிய இனாம் நில அடிமனையில் குடியிருக்கும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும், இந்து அறநிலைத்துறை என்ற பெயரில் குடியிருக்கும் மக்களை காலி செய்ய சொல்லி அச்சுறுத்துவதை நிறுத்த வேண்டும், மேலும் கோயில், மடம், வக்பு வாரிய நிலங்களில் விவசாயம் செய்யும் குத்தகை விவசாயிகளுக்கு, குத்தகையினை முறைப்படுத்தி பட்டா வழங்க ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதற்கு பொன்னேரி பகுதி தலைவர் எஸ்.எம்.அமுல் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் வ.செல்வம், மாவட்ட தலைவர் எம்.வீ.நக்கீரன், செயலாளர் பி.அருள், பொருளாளர் எஸ்.இ.சேகர், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.சம்பத், ஜி.ராஜா, வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.மதன், மாதர் சங்கத்தின் தலைவர் லாவண்யா, விதொச தலைவர் பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.