tamilnadu

img

ஐ.ஐ.டி இட ஒதுக்கீடு ஆய்வுக் குழு அறிக்கையை உடனே நிராகரியுங்கள் - சு. வெங்கடேசன் எம்.பி

ஐ.ஐ.டி மாணவர் அனுமதி மற்றும் ஆசிரியர் நியமனங்களில் இடஒதுக்கீடு முறையாக அமலாவது பற்றி ஆராய அமைக்கப்பட்டுள்ள குழு அதன் நோக்கங்களுக்கு எதிரான பரிந்துரைகளை செய்திருப்பதால் அவ்வறிக்கையை முற்றிலுமாக நிராகரிக்குமாறு சு.வெங்கடேசன் எம்.பி (சி.பி.எம்) மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் 'நிஷான்ங்' கிற்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு அமைச்சர் அக் குழு அறிக்கை பரிசீலனையில் இருப்பதாக பதில் அளித்திருக்கிறார். ஆனால் இட ஒதுக்கீடு தொடர்பான அக் குழு அறிக்கையை கால தாமதமின்றி நிராகரிக்குமாறு சு. வெங்கடேசன் மீண்டும் வலியுறுத்தி இருக்கிறார்.

*அமைச்சர் பதில்*

மத்தியக் கல்வி அமைச்சர் பிப்ரவரி 15, 2021 அன்று அளித்துள்ள பதிலில், அக் குழு அறிக்கை இப் பிரச்சினையோடு தொடர்புடைய அமைச்சகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு கருத்துக்கள் வரப் பெற்றிருப்பதாகவும், தற்போது ஐ.ஐ.டி கவுன்சிலின் நிலைக் குழு பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் பதிலுக்கு நன்றி தெரிவித்துள்ள சு.வெங்கடேசன் எம்.பி, "அவ்வறிக்கை மீது எனது மீண்டும் அழுத்தமான கருத்தை பதிவு செய்ய விழைகிறேன். அவ்வறிக்கை முற்றிலுமாக நிராகரிக்கப்பட வேண்டும்" என்று அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

*சந்தேக நிழல்*

மேலும், "அக்குழு மத்தியக் கல்வி நிலையங்கள் (ஆசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீடு) சட்டம் 2019 பற்றி இரண்டு முன் மொழிவுகளை செய்துள்ளது. திட்டம் (அ) ஐ.ஐ.டி ஆசிரியர் நியமனங்களை இட ஒதுக்கீடு வரம்பில் இருந்தே நீக்க வேண்டுமெனப் பரிந்துரைத்துள்ளது. திட்டம் (ஆ) இட ஒதுக்கீட்டின் வரம்பிற்குள் உதவிப் பேராசிரியர் (தட்டு 1 & 2) மட்டும் இருந்தால் போதும்; மற்ற பதவிகளை இட ஒதுக்கீட்டில் வரம்பில் இருந்து 'விடுவிக்கலாம்' என்றும் அது பரிந்துரைத்துள்ளது. இந்த இரண்டு முன் மொழிவுகளுமே மத்தியக் கல்வி நிலையங்கள் (ஆசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீடு) சட்டம் 2019 ஐ முறையாக அமலாக்குவது பற்றிப் பேசவில்லை. உண்மையில் அச் சட்டத்தை பொருளற்றதாக மாற்றுவதாகவே அதன் கருத்துக்கள் அமைந்துள்ளன."

"மத்தியக் கல்வி நிலையங்கள் (மாணவர் அனுமதியில் இட ஒதுக்கீடு) சட்டம் 2006" பற்றியும் ஆராய்ந்த அக்குழு அதன் அமலாக்கம் குறித்து முழு திருப்தியைத் தெரிவித்துள்ளது. ஆனால் மாணவர் அனுமதி குறித்து கிடைக்கும் தகவல்களும், தரவுகளும் அறிக்கையின் மதிப்பீடோடு சற்றும் பொருந்தவில்லை.

இட ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்படாத பட்சத்தில் அவற்றை பொது இடங்களாக (Dereservation) மாற்றுவது குறித்த அக் குழுவின் பரிந்துரைகளும் பொது நெறிகளுக்கும், இது குறித்த அரசாணைகளுக்கும் முரணானதாக உள்ளது. இடஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்படாவிட்டால் அடுத்த ஆண்டே பொது இடங்களாக மாற்றப்படலாம் என அக் குழு பரிந்துரைத்துள்ளது. இது "நிலுவைக் காலியிடங்கள்" (Back log) என்ற கருத்தாக்கத்தையே கொன்று விடும். ஒடுக்கப்பட்ட பிரிவினர் பிரதிநிதித்துவத்தில் உள்ள இடைவெளியை நிரந்தரமானதாக ஆக்கி விடும். ஆகவே இத்தகைய முன் மொழிவை நேரடி பணி நியமனங்களில் அனுமதிக்கவே கூடாது.

இந்த பரிந்துரைகள் எல்லாம் அக் குழுவின் நோக்கம் பற்றியே சந்தேகங்களை எழுப்பியுள்ளன."

*நிராகரியுங்கள்*

"குழுவின் அறிக்கை ஏற்படுத்தியுள்ள குழப்பம் தொடர அனுமதிக்கக் கூடாது. அவ்வறிக்கையை முழுமையாக நிராகரிக்கிற முடிவு காலம் சற்றும் விரயம் ஆகாமல் உடனே எடுக்கப்பட வேண்டும். ஐ.ஐ.டி கவுன்சிலின் நிலைக்குழு இட ஒதுக்கீட்டின் அடிப்படை நெறிகளை, சட்டத்தின் நியதிகளை மீறக் கூடாது என பொருத்தமாக அறிவுறுத்த வேண்டும்.

மேலும் இவ்விரு சட்டங்களின் முறையான அமலாக்கம் எழுத்தும், எழுத்தின் உணர்வும் சற்றும் நீர்த்துப் போகாமல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்"

என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ள சு. வெங்கடேசன் எம்.பி தனது கருத்துக்களிலுள்ள நியாயங்களைப் புரிந்து கொண்டு விரைவாக முடிவெடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

;