tamilnadu

img

கிராமப்புறங்களில் பள்ளிகளை திறப்பது குறித்து ஆய்வு செய்க- உயர்நீதிமன்றம்

தமிழ்நாடு: கிராமப்புறங்களில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஆய்வு செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

கொரோனா தொற்றுப் பரவலையொட்டி தமிழகத்தில் சில மாதங்களாகப் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் , கிராமப்புறங்களில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் பயிலும் மாணவர்கள் , பள்ளிக்கூடங்களில் கிடைக்கும் சத்துணவு கிடைக்காமல் அவதிப்படுவதால் குடிமக்கள் நுகர்வோர் மற்றும் குடிமை நடவடிக்கை குழு , நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. 

இந்த வழக்கானது தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி , நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. இந்த வழக்கு , இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் , கொரோனா பெருந்தொற்று காரணமாகப் பள்ளிகள் திறக்கப்படாததையொட்டி மாணவர்கள் சத்துணவு கிடைக்காமல் பசிப்பிணியால் வாடுவதாகவும் , சத்துணவுத் திட்டம் மூலமாக மாணவர்களின் வீட்டிற்குக் கொடுத்துவிடும் ரேஷன் பொருட்களை மாணவர்களின் பெற்றோர்கள் விற்றுவிடுவதாகவும் , இதனால் மாணவர்கள் உணவுக்காக இழிநிலைக்குத் தள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டார். அதனால் அங்கன்வாடி மையங்களைத் திறந்து மாணவர்களுக்குச் சத்துணவு வழங்குமாறும் கேட்டுக் கொண்டார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி , இது குறித்து  தமிழக அரசின் கருத்தினை தெரிவிக்குமாறு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் அவர்களிடம் உத்தரவிட்டார். 

மேலும் , கொரோனா மூன்றாம் அலை குறித்த அறிவியல் பூர்வ தகவல் எதுவும் அறிவிக்கப்படாததால் பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளுமாறும் தமிழக அரசிடம் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

;