tamilnadu

img

சென்னை, காஞ்சிபுரத்தில் கனமழை

சென்னை, காஞ்சிபுரத்தில் கனமழை பெய்து வருவதால் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி  உள்ளது. 
சென்னையில் கடந்த 13, 14 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் கடும் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடைசி நேரத்தில் திசை மாறியதால் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இதனால் சென்னையின் பல பகுதிகளிலும் நீர் வடியத்துவங்கியது.
இந்த நிலையில் மீண்டும் நேற்று இரவு  கன மழை கொட்டியது. இதனால் பல பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மழை நீர் தேங்கி உள்ளது. இதனால்  8 முக்கிய சாலைகள் மழை வெள்ளத்தால் முடங்கி உள்ளன. அந்த சாலைகளில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  
அதேசமயம் தி.நகர் மேட்லி சுரங்கப்பாதை, கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் இரண்டு சக்கர வாகன சுரங்க பாதையில் மழை நீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த கவனமாக இருக்குமாறு ஆட்சியர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார். 
பலத்த மழை காரணமாக பாலாறு, செய்யாறு, அடையாறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் ஏரிகள், ஆறுகள், தரைப்பாலங்கள் மற்றும் தடுப்பணை உள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். தண்ணீர் இறங்கவோ, குளிக்கவோ, கடக்கவோ துணி துவைக்கவோ செல்பி எடுக்கவோ வேண்டாம் என ஆட்சியர்  தெரிவித்துள்ளார். 
 

;