tamilnadu

img

பெற்றோரை ஈர்க்கும் அரசுப்பள்ளிகள்... 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை சேர்ந்துள்ளோர் 75 ஆயிரம் பேர்...

சென்னை:
கொரோனா பரவலால் வருமானம் மற்றும் வாழ்வாதாரம் இழந்துள்ள பெற்றோர், தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இருந்து அரசுபள்ளிகளுக்கு மாற்ற முடிவு செய்துள்ள னர். 

தமிழகத்தில் இந்தாண்டில் இதுவரை 75,725 மாணவர்கள் ( முதலாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்புவரை) தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு மாறியுள்ளனர்.அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.ஜூலை 24-ஆம் தேதி நிலவரப்படி, 60,085 மாணவர்கள் தனியார் பள்ளிகளிலிருந்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும், 68,569 மாணவர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கும் மாறியுள்ளனர்.
2,04,379 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளுக்கும்,  அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளுக்கும் மாறியுள்ளனர் என்று  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஜூலை 26-ஆம் தேதி தெரிவித்தார்.சென்னையைச் சேர்ந்த உமாபதி என்பவர் கூறுகையில், “ கொரோனா பரவலால் எனது வியாபாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனது இரு பிள்ளைகளும் சிபிஎஸ்இ பள்ளியில் படித்தனர். இதில் எட்டாம் வகுப்பு படிக்கும் இரண்டாவது மகளை சாலிகிராம் அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளேன். மூத்த மகள் பன்னிரெண்டாம் வகுப்பு  படிக்கிறார். இதனால் அவரை வேறுபள்ளிக்கு மாற்ற இயலவில்லை. எனது இரண்டு பிள்ளைகளுக்கும் என்னால் கட்டணம் செலுத்த முடியவில்லை” என்றார். 

தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அருமை நாதன் கூறுகையில், “ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பள்ளிமாறிச் செல்வது வழக்கம். அது இந்தாண்டு அதிகரித்துள்ளது”என்கிறார்.மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கூறுகையில், “எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இருவரை அரசுப் பள்ளிகளில் சேர்த்துவிட்டேன்” என்றார். பல குழந்தைகளின் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் ஆன்லைன் வகுப்புகளில் தொடர்ந்து பங்கேற்க வைப்பதற்காக போராடி வருகின்றனர். இன்றைய நிலையில் பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் அரசுப்பள்ளிகள் சிறப்பானதாக உள்ளது” என்றார்.கொரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால்  தனியார் பள்ளிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள் ளன. அவர்களின் நிலை அறிந்து அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என்றும் ஆட்டோ ஓட்டுநர் கூறினார்.இந்த ஆண்டு இதுவரை பதினோராம் வகுப்பு மாணவர்கள் 16,620 பேர் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு சென்றுவிட்டனர்.

சிறிய நகரங்கள் தொடங்கி மாவட்டங்கள் வரை தனியார் பள்ளிகளில் இருந்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கு மாறும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்கிறார் தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரேமண்ட். பெற்றோர்களின் வாழ்வாதார மின்மை, வேலையின்மை தான் இந்த மாற்றத்திற்குக் காரணம் என்கிறார்.பெற்றோர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக பள்ளிக் கல்வித்துறை அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். காலி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவேண்டும் எனவும்  அவர் சுட்டிக்காட்டுகிறார். 

;