tamilnadu

img

மின் வாரிய ஊழியர்களுக்கும் மருத்துவக் காப்பீடு -அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

மின்வாரிய ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து, அதற்கான வழிகாட்டுதல்களைத் தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்தது. இதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டது. இதில், மீண்டும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஜூலை முதல் வரும் 2025 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி வரை 4 ஆண்டுகளுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த காப்பீட்டுத் திட்டம் மின் வாரிய ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ள 1,169 மருத்துவமனைகளில் 203 வகையான சிகிச்சைகளுக்குக் காப்பீட்டுத் தொகை அனுமதிக்கப்படும். இத்திட்டம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (டான்ஜெட்கோ), தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் (டான்டிரான்ஸ்கோ), தமிழ்நாடு மின்சார வாரியம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் பொருந்தும். இந்த நிறுவனங்களின் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை மூலம் சிகிச்சை பெறலாம். அரிய வகை நோய்களுக்கு, அதாவது அரசால் பட்டியலிடப்பட்ட சிகிச்சைகளை ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை மூலம் மேற்கொள்ளலாம். 

டான்ஜெட்கோ நிறுவனம் ஒவ்வொரு பணியாளருக்கும் ரூ.3,240 ஐ பிரீமியமாக செலுத்துகிறது. இதற்காக பணியாளர்களிடம் இருந்து மாதந்தோறும் இரு பிரிவாக ரூ.285 மற்றும் ரூ.5 என ரூ.300 பிடித்தம் செய்யப்படும். இதில் ரூ.5 என்பது நிதியமாக உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.5.60 கோடி சேகரிக்கப்படுகிறது. இந்தத் தொகை மூலம் மிகவும் அரிதான சில நோய்களுக்குச் சிகிச்சை பெற ரூ.20 லட்சம் வரை அனுமதிக்கப்படுகிறது. இதுகுறித்து உயர்நிலைக் குழு முடிவெடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் மின் துறைப் பணியாளர்களாக இருந்தால், இருவரில் இளையவரிடமிருந்து பணியாளர் பங்களிப்பு பெறப்படும். தொகுப்பூதியம், நிலையான ஊதியம், மதிப்பூதியம், தினக்கூலி, ஒப்பந்தம், மறு பணியமர்த்தல், தற்காலிகப் பணி உள்ளிட்ட திட்டங்களின் கீழ் பணியில் அமர்த்தப்பட்டவர்களுக்கு, இந்த காப்பீட்டுத் திட்டம் பொருந்தாது. 

காப்பீட்டுத் திட்டத்தில் இல்லாத மருத்துவமனைகளில் ஏதேனும் அவசர அடிப்படையில் சிகிச்சை மேற்கொண்டாலும், அதற்கான தொகை பின்னர் வழங்கப்படும். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;