tamilnadu

img

கி.ரா.விற்கு அரசு மரியாதை.... தமிழக முதல்வருக்கு நன்றி.....

சென்னை:
எழுத்தாளர் கி.ரா.விற்கு அரசு மரியாதை செலுத்தியமைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கரிசல் காட்டு இலக்கியத்தின் ஞானத் தந்தையான எழுத்தாளர் கி.ராஜ்நாராயணன் மேதைமைக்கும்,  இலக்கிய பங்களிப்புக்கும் பொருத்தமான வகையில் அவரது மறைவின்போது தமிழ்நாடு அரசு மரியாதை செலுத்தி இருக்கிறது.  அவரது இறுதி நிகழ்வின் போது குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தியது; அவரது சொந்த ஊரான கோவில்பட்டி நகரத்தில் அவருக்கு சிலை வைக்கப்போவதாக அறிவித்தது. அவர் பயின்ற பள்ளியில் அவரது நினைவுகளை பேணும் வகையில் அரங்கம் அமைக்க முடிவெடுத்தது ஆகியவை அனைத்தும், அந்த முதுபெரும் படைப்பாளிக்கு தமிழக அரசு அளித்த மிகப் பொருத்தமான அஞ்சலியாகும்.

“நான் மழைக்காக மட்டுமே பள்ளிக்கூடத்தில் ஒதுங்கியுள்ளேன்; அப்போதும் மழையைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன்” என்று கி.ரா. கூறிய வார்த்தை அடர்த்தியான அர்த்தச் செறிவு கொண்டது.சமூக வாழ்வியலின் தொடக்க காலத்தை ஊடுருவிப் பார்த்து, அதன் வளர்ச்சிக் கூறுகளை காய்தல் உவத்தல் இன்றி ஆய்வுசெய்து, அதன் மனித நேயப் பண்புகளை வெளிக்கொணர்ந்து, அது செல்ல வேண்டிய இலக்கையும் துலக்கப்படுத்தினார் கி.ரா.பள்ளிக்கூடமே செல்லாத அந்தப் பெருந்தகையை, புதுச்சேரி பல்கலைக் கழகம் தனது பேராசிரியராக அமர்த்தி பெருமைப்பட்டது.

தமிழ்நாடு அரசு அறிவாளிகளை அங்கீகரிக்கும், ஆதரிக்கும், அவர்களது நினைவுகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்வதன் மூலம், அவர்களது படைப்புகள் நீடித்து நிலைப்பதற்கு அரசு துணை நிற்கும் என்பதை செயல் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிப்படுத்தியிருக்கிறார்.கி.ரா. அவர்களுக்கு உரிய வகையில் மரியாதை செலுத்தியமைக்காகவும், அவரது நினைவையும் படைப்புகளையும் தமிழ் சமூகத்தின் மத்தியில் விரிவாக எடுத்துச் செல்ல எடுக்கப்படும் முயற்சிகளுக்காகவும்  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வரவேற்று. தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

;