tamilnadu

img

முறைசாராத் தொழிலாளர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கிடுக... தமிழக அரசுக்கு சிஐடியு வலியுறுத்தல்...

சென்னை:
கொரோனா ஊரடங்கினால் வேலையிழந்து வருமானமின்றி துயரில் உள்ள முறைசாரா தொழிலாளர்களுக்கு பாகுபாடு பாராமல் அனைவருக்கும் தமிழக அரசு பொங்கல்பரிசு வழங்க வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சிஐடியு மாநிலப் பொதுச்செய லாளர் ஜி.சுகுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

சிஐடியு தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு கூட்டம் ஜனவரி  8 அன்று சென்னையில் மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பொங்கல் திருநாளையொட்டி கட்டுமானத்தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர் களாக உள்ள தொழிலாளர்களுக்கு பொங்கல்பரிசுவழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் தொழிலாளர் துறையின் கீழ் கட்டுமானம் உள்ளிட்ட 18 தொழில்வாரியான நலவாரியங்கள் உள்ளன. இந்த  வாரியங்களில் சுமார் 75 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ள நிலையில் கட்டுமான தொழிலாளருக்கு மட்டும் பொங்கல் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது தொழிலாளர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்தும் செயலாகும். கொரோனா ஊரடங்கி னால் வேலையிழந்து வருமானமின்றி பெரும் துயரத்திற்கு ஆட்பட்டு கிடக்கும் முறைசாரா தொழிலாளர்களுக்கு பாகுபாடு பாராமல் முறைசாரா நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர் அனைவருக்கும் தமிழக அரசு பொங்கல்பரிசு வழங்க வேண்டும். 

கொரோன ஊரடங்கை காரணம் காட்டி கட்டுமானம் உள்ளிட்ட முறைசாரா தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினராக பதிவுசெய்ய இணையவழி சேவை அறிமுகப்படுத்தப் பட்டது.  இந்த இணைய வழியாக உறுப்பினராக பதிவு செய்வதில் ஏராளமான நடைமுறை பிரச்சனைகள் தொழிலாளர்களுக்கு ஏற்படுகிறது. பதிவு செய்த தொழிலாளருக்கு முறையாக பதிவு அட்டை கிடைக்கவில்லை.  முறையான ஆய்வுகள் இல்லாமலேயே பதிவு விண்ணப்பத்தை நிராகரிக்கப்படுகிறது. தொழிற்சங்கங்கள் அளித்த ஆலோசனைகள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. சரிபார்க்கும் சான்றிதழ் வழங்கும் கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பந்தப்பட்ட தொழிலாளிகளை சந்திக்காமலேயே  தொழிலில் ஈடுபடவில்லை என்று சான்றளிக்கும் நிகழ்வுகளும் நடக்கின்றன. எவ்வித விசாரணையுமின்றி 60 நாட்களில்  காரணங்கள் எதுவும்  கூறாமல் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.இவ்வாண்டு நல வாரிய பணப்பயன் ஆன்லைன் விண்ணப்பத்தில் உள்ள குளறுபடிகளின் காரணமான பெரும்பகுதி தொழிலாளருக்கு கிடைக்க வேண்டிய பணப்பயன்கள் முடக்கப்பட்டுள்ளது. 2019-20 ஆம் ஆண்டு கிடைக்க வேண்டிய பணப்பயன்களை நேரடி விண்ணப்பங்கள் பெற்று காலதாமதமின்றி வழங்க வேண்டும்.

முறைசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த உருவாக்கப்பட்ட சட்டப்படியான நல வாரியங்களின் செயல்பாடுகளில் அபிவிருத்தி காண்பதற்கும், தொழிலாளர்கள் பதிவு, புதுப்பித்தல் பணிகளை எளிதாக்கவும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கண்காணிப்புக்குழுக்களை உடனடியாக கூட்டி நலவாரிய செயல்பாட்டை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும். அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்த காலம் முடிந்துவிட்டது. புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உருவாக்க தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு ஏற்படுத்த தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும். பீடி சுற்றும் தொழிலாளர்கள் மற்றும் தோல் தொழிற்சாலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்ற மறுக்கும் முதலாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொரோனா முன்கள பணியாளர் என்றுமத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தூய்மைப்பணி தொழிலாளர்களுக்கு பிரதமர் மோடி உட்படபாஜகவினர் அவர்களுக்கு மலர் மாலை அணிவித்து காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். நாடும், நாட்டு மக்களும் கடும் நெருக்கடியில் சிக்கித்தவித்த போது உயிரையும் பொருட்படுத்தாமல்  தூய்மைப்பணியை மேற்கொண்ட தொழிலாளருக்கு தமிழக அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க மறுத்து வருவது ஆட்சியாளர்களின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. சென்னை மாநகரட்சியில் அரசாணையின்படியான ஊதியத்தை வழங்கக் கோரி ஜனநாயக  ரீதியில் போராடிய செங்கொடி சங்க நிர்வாகிகள் 6 பேர் பழிவாங்கும் நடவடிக்கையாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு   அறிவித்த அரசாணையினை அமல்படுத்தவும்,  சங்க நிர்வாகிகள் மீதுதொடுக்கப்பட்டுள்ள பழிவாங்கும் நடவடிக்கை கள் அனைத்தும் திரும்பப்பெற வேண்டும்.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான 7 என்டிசி பஞ்சாலைகள் ஆலைகள்மார்ச் 24 தேதி  முதல்  மூடிக்கிடக்கிறது. இதில்தற்போது 2 ஆலைகளை மட்டும் திறக்கப்பட்டுள்ளது. லாபம் ஈட்டும் ஆலைகளை மட்டும் இயக்குவது என்ற மத்திய அரசின் முடிவு தவறானது. உடனடியாக அனைத்து ஆலைகளையும் திறந்துதொழிலாளர் அனைவருக்கும் வேலை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை சிஐடியு வலியுறுத்துகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;