tamilnadu

img

கொரோனா நிவாரணத்திற்கு ரூ.150 கோடி: ஜாக்டோ-ஜியோ.....

சென்னை:
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியாளர்கள் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தங்களது ஒருநாள் ஊதியமான 150 கோடி ரூபாயை  வழங்குவதாக ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக முதலமைச்சரின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு அர்ப்பணிப்பு உணர்வோடு களப் பணியாற்றும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.தமிழகத்திலுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியாளர்களின் கோரிக்கைகளை கனிவுடன் பேச்சுவார்த்தை மூலம் நிறைவேற்றுவதற்கான அரசு, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளது. தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு ஜாக்டோ-ஜியோ மீண்டும் தனது நெஞ்சார்ந்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

தற்போது இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மிக உக்கிரமாக உள்ளது. இந்திய அரசும் தற்போது மக்களின் அறுதிப் பெரும்பான்மையோடு அரியணையில் அமர்ந்திருக்கும் திமுக தலைமையிலான தமிழக அரசும் கொரோனாவினைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளன. அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்களப் பணியாளர்களோடு தமிழகத்தில் அனைத்துத் துறைப் பணியாளர்களும் ஒருங்கிணைந்து செயலாற்றி வருகின்றனர். இந்திய அரசிற்கும் அந்தந்த மாநில அரசுகளுக்கும் இந்த நோயினை எதிர்கொள்வதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு போதிய நிதி ஆதாரங்களை திரட்ட வேண்டிய நிலை உள்ளது.

இத்தகைய ஒரு அசாதாரணமாக சூழ் நிலையில் தமிழகத்திலுள்ள 12 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியாளர்கள், சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு, அங்கன்வாடிப் பணியாளர்களின் கூட்டமைப்பு ஜாக்டோ -ஜியோ ஒருநாள் ஊதியத் தினை கொரோனா நோய் தொற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தமிழக அரசிற்கு வழங்க முடிவு செய்துள்ளது.கோவிட் 19 தடுப்பு நடவடிக்கைகளில் தங்களின் உயிரையும் துச்சமென மதித்து, நோய் பாதிக்கப்பட்டோரை அந்த பாதிப்பிலிருந்து மீட்டெடுக்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வகப் பணியாளர்கள், மருந்தாளுநர் கள், மருத்துவத் துறை தொழில்நுட்பப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவம் சார்ந்த பணியாளர்களுக்கும் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கான சுகாதாரப் பணிகளை மேற்கொண்டுள்ள அனைத்து சுகாதார தூய்மை ஊழியர்களுக்கும் மக்களின் அத்தியாவசியத் தேவைப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்துத் துறைப் பணியாளர்களுக்கும் ஜாக்டோ -ஜியோ தனது மனமார்ந்த பாராட்டுதல்களையும் நெஞ்சார்ந்த நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறது.

இப்பணியாளர்களுக்கு தோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கு சானிடைசர், முகக் கவசம், கையுறை போன்ற பாதுகாப்பு அம்சங் களை வழங்க தமிழக அரசு உத்திரவாதப் படுத்த வேண்டும் என்று ஜாக்டோ- ஜியோ கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு அதில் கூறப்பாட்டுள்ளது.

;