tamilnadu

img

மாற்றுத்திறனாளி உயிருடன் இருப்பதை குடும்பத்தினர் உறுதி செய்தாலே உதவித்தொகை வழங்க உத்தரவிடுக.... தலைமைச்செயலாளருக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை.....

சென்னை:
மாற்றுத்திறனாளி உயிருடன் இருப்பதை குடும்பத்தினர் உறுதி செய்தாலே உதவித்தொகை  வழங்க உத்தரவிட வேண்டும் என்றுவலியுறுத்தி தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கோரிக்கை மனு அனுப்பியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி, மாநிலப் பொதுச்செயலாளர்  எஸ். நம்புராஜன் ஆகியோர் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:40 சதவீதம் பாதிப்புக்குள்ளான மனவளர்ச்சி, தசைச்சிதைவு, தொழுநோய் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 75 சதவீதத்திற்கும் மேல் பாதிப்படைந்த உடல் ஊனமுற்றவர்கள் - ஆகிய 4 பிரிவினருக்கு ரூ.1,500 மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.  இந்த உதவித்தொகையை பெற்றுவரும் சம்பந்தப்பட்ட பயனாளி, உயிருடன் இருப்பதற்கான சான்று (life certificate) ஒவ்வொரு நிதியாண்டு துவக்கத்திலும் கிராம நிர்வாக அலுவலரிடம்(VAO) இருந்து பெற்று வழங்க நிர்ப்பந்திக்கப்படுகிறது.   

கொரோனா காலத்திலும் அலைக்கழிப்பு
கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல மாவட்ட அலுவலகங்களை  மாற்றுத்திறனாளிகளும் அவர்களதுகுடும்பத்தினரும் தேடி அலைய வைக்கும்படியாகவும், லஞ்ச லாவண்யத்திற்கு வழிவகுப்பதாகவும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் இந்த நடவடிக்கை அமைகிறது.   மேலும் இதுவரை அரசாங்கத்தால் 10 சதவீதம் பேருக்குக்கூட கொடுத்து முடிக்கப்படாத பல்நோக்கு அடையாள சான்று(UDID) போன்றதேவையற்ற பல்வேறு விபரங்களும் கேட்கப்படுவதால், கொரோனா 2-வது அலையின் கொடூரத் தாக்கம் உள்ள இந்த நேரத்திலும் தேவையற்ற அலைக்கழிப்புகளுக்கு மாற்றுத்திறனாளி குடும்பங்கள் ஆளாக்கப்படுகின்றனர்.

குடும்பத்தினர் உறுதிச்சான்று
மாற்றுத்திறனாளி உயிருடன் இருப்பதைஒவ்வொரு ஆண்டும் உறுதி செய்ய அரசுத்தரப்பில் கோருவது நியாயம் என்றே மாற்றுத்திறனாளிகள் சங்கம் கருதுகிறது.  எனினும், இதற்காக மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிக்காமல், சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளியோ அல்லது குடும்பத்தலைவர், பாதுகாவலர் சார்பிலோ உறுதி சான்று(self (or) family declaration) தபால் மூலம் அளித்தாலே போதும் என்ற அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயல்பட்டிட உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;