tamilnadu

img

வறண்டு போன ஆணைக்குட்டம் அணை விருதுநகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

விருதுநகர், ஏப்.21-விருதுநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான ஆணைக்குட்டம் அணை முற்றிலும் வறண்டு போனது. இதனால், விருதுநகர் நகராட்சி பகுதியில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலை உள்ளது.விருதுநகர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்குள்ள சமார் 22 ஆயிரம் வீடுகளில் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு, 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் குடிநீர் இணைப்புகள் உள்ளன. விருதுநகர் நகராட்சி பகுதிக்கு ஆணைக்குட்டம் அணையிலிருந்து நாளொன்றுக்கு சுமார் 23 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைத்து வந்தது. மேலும், தாமிபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் சராசரியாக 18 முதல் 20 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இவையனைத்தும் 16 மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் மூலம் 90 பிரிவுகளாக குடியிருப்புகளுக்கு 7 முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றன.அதிலும், அன்னை சிவகாமிபுரம் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியிலிருந்து குடிநீர் வழங்கப்படும் பகுதிகளான ஒளவையார் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, சிவன் கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு, பெரிய பள்ளி வாசல் தெரு, பர்மா காலனி, அன்னை சிவகாமி புரம் ஆகிய பகுதிகளுக்கு 11 முதல் 13 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்குகிறது. ஆனால், அனைத்துப் பகுதியினருக்கும் ஒரே மாதிரியான குடிநீர் கட்டணமே நகராட்சியால் வசூலிக்கப்படுகிறது.


இந்நிலையில், விருதுநகர் நகராட்சிக்கு அதிகளவில் குடிநீர் வழங்கி வரும் ஆணைக்குட்டம் நீர்த் தேக்கத்தில் தண்ணீர் முற்றிலும் வற்றி விட்டது. இதனால், அணையைச் சுற்றி நகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள 13 கிணறுகள் மூலம் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதில் போதுமான அளவு குடிநீர் கிடைக்காது. மற்றொரு திட்டமான, தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் கோடை காலங்களில் திடீரென பிரதான குடிநீர்க் குழாய்களில் பழுது ஏற்பட்டால், குடிநீர் விநியோகம் தடைபடும் நிலை உள்ளது.இதனால், விருதுநகர் நகராட்சி பகுதியில் 12 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கோடை கால நீர்த் தேக்கங்களான ஒண்டிப்புலி மற்றும் காரிசேரியிலிருந்து குடிநீர் எடுத்தாலும், தென் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளுக்கு மட்டுமே குடிநீரை கொண்டு செல்ல முடியும்.அதேநேரத்தில், நகராட்சி நூற்றாண்டு விழாவையொட்டி கட்டி முடிக்கப்பட்ட 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் காட்சிப் பொருளாய் அப்படியே உள்ளன. அவற்றை செயல்படுத்திட சுமார் ரூ.1 கோடி அளவிற்கு பிரதான குடிநீர் குழாய் பதித்தால் மட்டுமே அவற்றை செயல்படுத்த முடியும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பப்பட்டும் தமிழக அரசு நிதி வழங்காத நிலை தொடர்கிறது.மேலும், மற்றொரு கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் அறிவித்தார். ஆனால், அதற்கான பணிகளும் தொடங்கப்படவில்லை. கோடை மழை கைவிட்டால் விருதுநகரில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது.எனவே, தமிழக அரசானது, போர்க்கால அடிப்படையில், விருதுநகர் நகராட்சி பகுதியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திட, அறிவிக்கப்பட்ட புதிய குடிநீர் திட்டங்களுக்கான நிதிகளை உடனே வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;