tamilnadu

img

தொலைதூர கல்வி முதுகலை பட்டதாரிகளுக்கு அரசுத் துறைகளில்  பதவி உயர்வு கிடையாது - சென்னை உயர்நீதிமன்றம்

தொலைதூர கல்வி மூலம் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் அரசுத் துறைகளில் பதவி உயர்வு பெற முடியாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சோளிங்கரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் பத்திரப்பதிவு துறையில் சார் பதிவாளராக பணியாற்றிவந்துள்ளார். பதிவுத் துறையில் 2 ஆம் நிலை சார் பதிவாளராகத் தேர்வான இவர், முதல் நிலை சார் பதிவாளராகப் பதவி உயர்வு வழங்கக் கோரி விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவர் தொலை தூரக் கல்வி மூலம் பட்ட மேற்படிப்பை முடித்திருந்தால் அவரது கோரிக்கை வணிகவரித்துறையால் நிராகரிக்கப்பட்டது. 

இதை எதிர்த்து செந்தில்குமார் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அவருக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில், திறந்தநிலை பல்கலைக்கழகம் அல்லது தொலைதூர கல்வி மூலம் பட்டப்படிப்பு முடிக்காமல், பட்ட மேற்படிப்பு படித்தவர்களைப் பணி நியமனத்துக்கோ, பதவி உயர்வுக்கோ பரிசீலிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, பதவி உயர்வு பட்டியலில் செந்தில்குமாரைச் சேர்க்க வேண்டுமென்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

;