tamilnadu

img

தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவித்துள்ள முதலமைச்சருக்கு சிபிஎம் பாராட்டு.....

சென்னை:
தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தந்தை பெரியாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது பிறந்த நாளை சமூகநீதி நாளாக தமிழக அரசின் சார்பில் கொண்டாடப்படும் என தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தந்தை பெரியார் வர்ணாசிரமத்தையும், சாதிய ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்தும் சமூகநீதியை நிலைநாட்டிடவும், பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராகவும், பகுத்தறிவு பிரச்சாரத்தையும் தமிழகத்தில் தன் வாழ்நாள் முழுவதும் லட்சியப் பணியாக மேற்கொண்டவர். இவரது பிறந்த நாளை சமூகநீதி நாளாக கொண்டாடுவது சால சிறந்ததாகும்.

வ.உ.சி.
இதேபோன்று, நாட்டின் விடுதலைக்காக சிறைக் கொட்டடிகளின் சித்ரவதைகளை அனுபவித்து செக்கிழுத்த செம்மல் என பாராட்டப்பட்ட வ.உ.சி அவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடுவதும், அவரது புத்தகங்கள் அனைத்தையும் புதுப்பொலிவுடன் வெளியிடுவது உள்ளிட்ட பல அறிவிப்புகளை தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார். வ.உ.சி. அவர்கள் சிறந்த தொழிற்சங்க போராளி. தலைச்சிறந்த தமிழ் படைப்பாளி என்ற பல பரிமாணங்களை கொண்ட அவரை பெருமைப்படுத்தும் அறிவிப்புகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அயோத்திதாசர்
இதனைத் தொடர்ந்து, தலைச் சிறந்த எழுத்தாளர், தமிழ்மொழி சீர்திருத்தத்தை றிமுகப்படுத்தியவரும், சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக போராடியவருமான அயோத்திதாசப்பண்டிதர் அவர்களுக்கு வடசென்னையில் மணிமண்டபம் கட்டப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்புகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;