tamilnadu

img

தோழர் காஸ்யபன் மறைவுக்கு சிபிஎம் அஞ்சலி....

சென்னை:
தமிழகத்தின் தலைசிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவரும், தமுஎகசவின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவருமான தோழர் காஸ்யபன் காலமானார். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலி செலுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின்மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:

இரா.சியாமளம் எனும் இயற்பெயர் கொண்டஎழுத்தாளர் தோழர் காஸ்யபன்  அவர்கள் ஜனவரி13 புதன்கிழமையன்று இரவு  நாக்பூரில் மரணமடைந் தார் என்ற செய்தி வேதனையளிக்கிறது.  மதுரையில், ஆயுள் காப்பீட்டுத் துறையில் பணிபுரிந்து கொண்டு தொழிற்சங்கத்தை, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை வளர்த்தவர். திரைப்படம், நாடகம், சிறுகதை போன்றவைகளில் இயங்கிய தோழர் காஸ்யபன், தீக்கதிர், செம்மலர் இதழ்களின் ஆசிரியர் குழுவில் இணைந்து அவைகளின் வளர்ச்சிக்கு துணை நின்றவர்.திரைப்படத்தை இயக்க அணிகளுக்கு முறையாக கற்பிக்க மும்பை சென்று திரைப்பட ரசனையை கற்று வந்து, தீக்கதிர்,செம்மலரில் திலீபன் எனும்பெயரில் திரைப்பட ரசனை குறித்து எழுதினார்.

மதுரை பீபிள்ஸ் தியேட்டர் எனும் நாடகக் குழுவை தொடங்கி இயக்க பரப்புரைக்கு நாடகக் கலையை தொடக்க காலத்தில் முன்னெடுத்தவர்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் பல நிலை பொறுப்புகள் வகித்து, அண்டை மாநில இலக்கிய அமைப்புகளோடு தமுஎசவின் முகமாக நின்று பணியாற்றி யவர். சமூக மாற்றதிற்கு மார்க்சியமே மாற்று என்பதில் உறுதியாகநின்று அது குறித்த கட்டுரைகளை தொடர்ந்து எழுதினார், பேசினார் காஸ்யபன். சிறந்த சிறுகதை எழுத்தாளராக இயங்கி எண்பதுக்கும்  மேற்பட்ட கதைகளை எழுதியுள்ளார். நாக்பூரில் மகனோடு வாழ்ந்து வந்த காஸ்யபன்கட்சியோடு நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தார். தமுஎகச மாநாடுகள் அனைத்திலும் உற்சாகமாக தன் இணையர் முத்து மீனாட்சியோடுபங்கு கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.வயது மூப்பின் காரணமாகவும், சர்க்கரை நோயாலும் அவதிப்பட்டு வந்த தோழர் காஸ்யபன் தன் 85 ஆவது வயதில் இயற்கை அடைந்திருக் கிறார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அஞ்சலியை செலுத்துகிறோம்.அவர் இணையர் எழுத்தாளர் முத்து மீனாட்சி, மகள் கன்ஸா காஸ்யப் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
 

;