tamilnadu

img

கொரோனா நிவாரணம்.... ரூ.2000 வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்....

சென்னை:
கொரோனா நிவாரணமாக  குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

சட்டப்பேரவை தேர்தலின்போது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தலைமை வகித்த திமுக ஆட்சிக்கு வந்ததும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 ரொக்கப்பணம் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதி வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.இந்நிலையில் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவி ஏற்றதும் முதல் கையெழுத்தாக கொரோனா நிவாரண நிதி உதவி வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார். கொரோனா பாதிப்பால் மக்கள் சிரமப்படும் இந்த சூழலில் ரூ.4 ஆயிரத்தில் இந்த மாதமேமுதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் வகையில் உத்தரவு பிறப்பித்தார். இதையொட்டி அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டது.

இதைதொடர்ந்து ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கும்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்களன்று (மே 10) நண்பகல் 12 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.தலைமை செயலகத்துக்கு பயனாளிகளை நேரில் வரவழைத்து அவர்களுக்கு ரொக்கப் பணமாக ரூ.2 ஆயிரம்வழங்கினார். பணத்தை பெற்றுக் கொண்டவர்கள் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மூத்த அமைச்சர்கள், தலைமை செயலாளர் வெ.இறையன்பு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புதுறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கொரோனா நிவாரணமாக ரூ.2 ஆயிரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியதை தொடர்ந்து,  ஒவ்வொரு பகுதியிலும் நியாயவிலை கடைகளில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதையொட்டி, வீடு வீடாக டோக்கன்வழங்கப்பட்டு வருகிறது. ரே‌சன் கடை ஊழியர்கள் அந்தந்த பகுதிகளுக்கு வந்து  குடும்ப அட்டை எண் அடிப்படையில் டோக்கன் வழங்கி வருகின்றனர்.அந்த டோக்கனில் ரே‌சன் கடையின் எண், அட்டைதாரரின் பெயர், நிவாரணநிதி வழங்கும் தேதி, நேரம் ஆகியவைகுறிப்பிடப்பட்டு உள்ளன. அந்த டோக்கனில் நம்மையும், நாட்டு மக்களையும் காப்போம்; தொற்றில் இருந்து மீட்போம் என்கிற கொரோனா விழிப்புணர்வு வாசகமும் இடம்பெற்றுள்ளது. டோக்கன் 12 ஆம் தேதி வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டோக்கனை பெற்றுக் கொண்டவர்கள் வருகிற 15 ஆம் தேதி முதல் அந்தந்த ரே‌சன் கடைகளுக்கு சென்று ரூ.2 ஆயிரம் பணம் பெற்றுக் கொள்ளலாம். டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி, நேரப்படி தான் பொதுமக்கள் வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தை தவிர்க்க ஒரு நாளைக்கு200 பேர்களுக்கு மட்டுமே பணம் விநியோகம் செய்யப்படுகிறது.தனிமனித இடைவெளியைப் பின்பற்றும் வகையில் ஒவ்வொரு ரே‌சன் கடை முன்பும் வட்டம் வரையப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து ரே‌சன் கடைகளில் பணம்வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

                      *************

கூடுதல் ரெம்டெசிவிர் மருந்துகள் தேவை மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

 முதல்வர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் அதில், “தமிழ்நாட்டில் 1 லட்சத்து 45 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நுரையீரல் அதிகம் பாதித்தவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுகிறது.தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு கூடுதலாக 20 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்துகள் தேவை அதிகமாக உள்ளது” என்று தெரிவித்திருந்தார். 
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்  கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி அளித்துள்ளார்.

 

;