tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : புதுமைப் பெண்களைப் படைத்த தோழர் ஜீவா...

ஜனவரி - 18

தான் கம்யூனிஸ்ட் ஆனதில் பெருமைப்பட்டோர் பலர் உண்டு. அவ்வாறு தான் கம்யூனிஸ்ட் ஆனதற்குக் காராணமானவர்களை, நிகழ்வுகளைக் குறிப்பிடும் போது அவை மற்றவர்களுக்கு உந்து சக்தியாகவும் உற்சாகமூட்டுபவையாகவும் அமைவதில் ஐயமில்லை.தோழர் பாப்பா உமாநாத், தான் கம்யூனிஸ்ட் ஆனது குறித்தும் அதற்குத் தோழர் ஜீவா எங்ஙனம் ஈர்ப்பாக இருந்தார் என்பதையும் ‘தாமரை’ ஜீவா சிறப்பு மலரில்(1963) தோழர் பாப்பா உமாநாத் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

தோழர் ஜீவா அவர்களைச் சந்தித்த முதல் நிகழ்வைப் பாப்பா உமாநாத் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

“தலைவர் ஜீவா அவர்களைப் பத்து வயதுச் சிறுமியாக இருந்தபோதே எனக்குத் தெரியும். தொழிலாளி வர்க்கத்தின் செங்கோட்டை என்று புகழப்படும் பொன்மலையிலே, ரயில்வே தொழிற்சங்க காரியாலயத்தில்தான் முதன் முதலாக ஜீவாவைப் பார்த்தேன். 1939 அல்லது அதற்கடுத்த ஆண்டாக இருக்கலாம். அவர் அன்று பேசிய கூட்டத்தில் நான் பாரதி பாடல்களைப் பாடினேன். என்னைத் தன்னருகே அழைத்துப் பேசிய ஜீவா உன்னைப் போன்று ஆயிரக்கணக்கான பெண்கள் வளர வேண்டுமென்று குறிப்பிட்டார்.” 

கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரான உன்னதமான நிகழ்வை இவ்வாறு விளக்குகிறார் பாப்பா உமாநாத்:

“நான் ஒரு கம்யூனிஸ்ட் என்ற பெருமையடையும் இந்தப் புனித நன்னாளில் எனக்கு இந்த கார்டு வழங்கியவர் தலைவர் ஜீவானந்தம். அதுவும் எனக்கு 15 வயதில் (18 வயதில்தான் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகலாம்) ஜீவாவின் சிபாரிசினால்தான் இந்த பாக்யம் எனக்குக் கிடைத்தது. இந்தச் சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது. நான் கட்சியில் சேர்ந்து 18 ஆண்டுகளாகி விட்டன(1963). அன்று கார்டு கொடுக்கும்போது, ஜீவா அவர்கள் செய்த வீரம் செறிந்த பிரசங்கம். ஒரு கம்யூனிஸ்ட் எப்படி மக்களுக்காக சிறை,தடியடி, தூக்கு என்று அஞ்சாமல் செயல்பட வேண்டுமென்று குறிப்பிட்டாரோ, அந்த உறுதியுடன்தான் இன்றும் செயல்படுகிறேன், என்றும் செயல்படுவேன், ஜீவாவின் ஆதர்சம் நிச்சயம் ஊக்குவிக்கும்.”

அன்று அவர் குறிப்பிட்டவாறே தோழர் பாப்பா அவர்கள், சிறந்த கம்யூனிஸ்டாக உறுதியாக இறுதிவரை செயல்பட்டதும் உழைக்கும் மக்களின் எண்ணற்ற போராட்டங்களில்  பங்கேற்று தடியடி,சிறைவாசம் போன்றவற்றை எதிர்கொண்டு சிறந்த தலைவராகத் திகழ்ந்ததும் அனைவரும் அறிந்ததே.இன்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கட்சியை வளர்க்க அன்று ஜீவாவும் மற்ற தோழர்களும் எதிர்நோக்கி சமாளித்த இன்னல்களைப் படிக்கும் நிலை ஏற்பட்டால் தாங்கள் இன்று செய்யும் வேலைகளை 10 மடங்காக்க வேண்டுமென்ற உணர்வுதான் நிச்சயம் ஏற்படும் என்றும் ஜனசக்தியில் வெளிவந்த ஜீவாவின் ‘புதுமைப் பெண்’ எனும் கட்டுரை தான் தன்னைப் பொதுவாழ்வில் ஈடுபடத் தூண்டியதாகவும் பாப்பா உமாநாத் கூறியுள்ளார்.மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என ஆவேசத்துடன் எழுந்து பெண் விடுதலைக்காக முழக்கம் செய்த பாரதியின் வழியில் நின்று புதுமைப் பெண்ணைப் படைத்த ஜீவாவின் எண்ணம் ஈடேற அயராது உழைப்போம் எனச் சபதமேற்ற பாப்பா உமாநாத் அவர்கள் இறுதிவரை பெண்கள் மத்தியில் ஆற்றிய பணி அளவிடற்கரிது. ஏராளமான பெண்களை அணிதிரட்டி உரிமைப் போர்களை நிகழ்த்தியதோடு பெண்தலைவர்களை உருவாக்கி கம்யூனிஸ்டுகளாக்கிய பெருமை பாப்பா உமாநாத் அவர்களையே சாரும். இம்மாபெரும் பணிக்கு ஜீவாவின் தொண்டு பெரும் உத்வேகத்தை அவருக்கு அளித்தது எனின் மிகையன்று.

(இன்று தோழர் ஜீவா நினைவு நாள் ஜனவரி 18)

===பெரணமல்லூர் சேகரன்===

;