tamilnadu

img

தோழர் பிருந்தா காலமானார்.... சிபிஎம் இரங்கல்...

சென்னை;
ஜனநாயக மாதர் சங்க மாநில நிர்வாகி பிருந்தா மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவரும், மாதர் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவருமான தோழர் பிருந்தா (64) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்ற செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. 

தோழர் பிருந்தா, ஜனநாயக மாதர் சங்கத்தை  சென்னையில் மத்தியதர பெண்கள் மத்தியில் அறிமுகம் செய்து மாதர் இயக்கத்தை வளர்த்ததில் முக்கியப் பங்கு வகித்தவர்.  அவர் ஒரு சிறந்த நாடகக்கலைஞர் ஆவார். சென்னை கலைக்குழுவின் தொடக்க கால நாடகங்களில் பங்கேற்று நடித்திருக்கிறார். மகளிர் சிந்தனை இதழின் பொறுப்பாசிரியர். மாதர் சங்கத்தின் பொருளாளர் என பல்வேறு பொறுப்புகளில் கடந்த 40 ஆண்டு காலமாக அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றியவர். தற்பொழுது மாதர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர்களில் ஒருவராக பணியாற்றி வந்தார். 

1980 இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட தோழர் பிருந்தா, தன் இறுதி மூச்சுவரை  கட்சியின் செயற்பாட்டாளராக வாழ்ந்தார்.1979ல் இந்தோ- ஸ்வீடன் நிறுவனம் ஒன்று கிராமப்புற வேளாண் உறவுகள்  குறித்த திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் தோழர் வெங்கடேஷ் ஆத்ரேயா தலைமையில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் கலந்து கொண்ட  தன்னுடன் களப்பணியாற்றிய முனைவர் இராஜகோபால் என்பவரை காதலித்து சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டார்.தோழர் பிருந்தா அவர்களின் மறைவு உழைக்கும் பெண்கள் அமைப்பிற்கும் மாதர் சங்கத்திற்கும் முற்போக்கு சக்திகளுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.அவரது மறைவால் துயருற்றுள்ள அவரது கணவர் தோழர் ராஜகோபால், மற்றும் அவரது மகளுக்கும்  உறவினர்களுக்கும், மாதர் சங்கத் தோழர்களுக்கும்  அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

தலைவர்கள் அஞ்சலி
கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாதர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் செல்வி, கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, வடசென்னை மாவட்டக்குழு உறுப்பினர் சி.சுந்தர்ராஜ், அம்பத்தூர் பகுதி செயலாளர் சு.பால்சாமி, டி.என்.லதா (சிஐடியு), கணேசன், எஸ்தர் ஆகியோர் தோழர் பிருந்தாவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.  ஞாயிற்றுக்கிழமை அம்பத்தூர் டன்லப் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

;