tamilnadu

img

சாதிய வன்ம படுகொலைகளுக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்ப முன் வாருங்கள்.... அனைத்து அரசியல் கட்சிகளுக்கு கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்....

ராணிப்பேட்டை  
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சோகனூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுன்(26) செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த சூர்யா(26) ஆகிய இருவர் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேரில் சென்று அஞ்சலிசெலுத்தி அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். 

அவருடன் மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் மாநிலக்குழு உறுப்பினர் ப.சுந்தர்ராசன், மாவட்ட செயலாளர் எஸ்.தயாநிதி, செயற்குழு உறுப்பினர்கள் எம்பி.ராமச்சந்திரன், எஸ்.டி.சங்கரி, அரக்கோணம் தாலுகா செயலாளர் த.ஞானமுருகன், திருத்தணி தாலுகாசெயலாளர் அப்சல், திருவள்ளூர் சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பெருமாள், அந்தோணி,  இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில துணைதலைவர் கேஎஸ்.கார்த்திஷ் குமார், பொருளாளர் தீபா,  மாவட்ட செயலாளர் எஸ்.பார்த்திபன், கட்சி நிர்வாகிகள் ஏபிஎம்.சீனிவாசன், துரைராஜ் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கட்சி, வாலிபர் சங்க தோழர்கள் உடன் சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலச் செயலாளர்  கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:

ஏற்கனவே இவர்களுக்கிடையே நடைபெற்ற பிரச்சனைக்கு சமரசப் பேச்சுவார்த்தைக்கு அவர்களை அழைத்து கும்பலாக சேர்ந்து அவர்களை கொடூரமாக தாக்கி சாதிவெறி வன்மத்தோடு இக்கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது.  இக்காலத்தில் தமிழகம் முழுவதும் பல்வேறு சாதிய வன்முறைகள், கொலைகள் நடந்துள்ளதில் காவல்துறை நடவடிக்கை எடுக்காததும், மெத்தனப்போக்கும் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். இதுபோன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் சாதிய வன்முறை வெறியாட்டங்களை தமிழக அரசு அடையாளம் கண்டுகடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். அனைத்து அரசியல்கட்சிகளும் சாதி வன்முறை வெறியாட்டத்திற்கு எதிராக கண்டன குரல் எழுப்ப முன்வரவேண்டும்.  மேலும் இவ்வாறு நடைபெறும் சாதிய வன்முறைகள் மற்றும் கொலைகள் குறித்து வழக்கு முறையாக பதிவு செய்து நடைபெறுவதில்லை. காவல்துறையும் கடமை உணர்வு பொறுப்புணர்வோடு வழக்குகளை நடத்தாததால் குற்றவாளிகள் கடைசியில் தப்பி விடுகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து விசாரணை நடத்தி, 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து,  மூன்று மாத காலத்திற்குள் வழக்கை நடத்தி முடித்து குற்றவாளிகள் தப்பிக்காத வண்ணம்அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும் வேண்டும்.இறந்து போனவர்களில் ஒருவருக்கு திருமணமாகி ஒரு மாதமேஆன நிலையிலும், மற்றொரு வருக்கு ஆறு மாத கைக்குழந்தை உள்ள நிலையை  காணும் போதுகண்கள் கலங்கி, நெஞ்சம் வெடிப்பது போல் இருக்கிறது. கணவரை இழந்து நிற்கும் இருபெண்களுக்கும்,  அவர்களது குடும்பத்திற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களது குடும்பங்களை பாதுகாக்க தமிழகஅரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இருவருக்கும் தலா ரூ.50லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். இருவரின் குடும்பத்திலும் தலா ஒருவருக்கு உடனடியாக அரசுவேலை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.இதுபோன்ற சாதிய வன்முறை வெறியாட்டங்கள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க அதிமுக, பாமக உள்ளிட்ட அனைத்துஅரசியல் கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் இதற்கு எதிராக கண்டன குரல் எழுப்பி பணியாற்ற முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
 

;