tamilnadu

கூட்டுறவு சங்க நிர்வாகம் கலைக்கப்படாது.. அரசு உத்தரவாதம்....

சென்னை:
தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகம் கலைக்கப்படாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.

விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கத்தின் தலைவர் எஸ்.முரளி. இவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘டி.டி.நெக்ஸ்ட் இணையதளத்தில் செய்தி ஒன்று வெளியாகி இருந்தது. அதில், கூட்டுறவு சங்கங்களின் தற்போதைய நிர்வாகத்தைக் கலைத்துவிட்டு, புதிதாக தேர்தல் நடத்த தமிழக அரசு விரைவில் கொள்கை முடிவு எடுக்கும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பேட்டி அளித்திருந்தார்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை இதுபோல ரத்து செய்வது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானதாகும். எனவே கூட்டுறவு சங்கங்களை கலைக்க தமிழக அரசுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார்.இதுபோல் பல கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தன.அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், ‘தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத்தை அரசுகலைக்க முடிவு செய்வது தவறான செயலாகும். இதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், ‘கூட்டுறவு சங்கத்தை அரசு கலைக் காது’ என்று உத்தரவாதம் அளித்தார். அதேநேரம், பல சங்கங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன. அந்த சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். அதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.

;