tamilnadu

சென்னையில் 9 இடங்களில் கடைகள் மூடல்...

சென்னை:
கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலியாக சென்னையில் மக்கள் அதிகம் கூடும் தி.நகர் ரெங்கநாதன் தெரு, கொத்தவால்சாவடி உள்பட 9 இடங்களில் கடைகள் மூடப்பட்டன.

சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர்கள் எண்ணிக்கை கூடி வருகிறது.தமிழகத்தில் கொரோனா தொற்று 3-வது அலை வராமல் தடுப்பதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதையொட்டி சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் தி.நகர் ரெங்கநாதன் தெரு, புரசைவாக்கம் டவுட்டன் சாலைபகுதிகள், கொத்தவால்சாவடி மார்க்கெட் பகுதி உள்ளிட்ட 9 இடங்களில் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டது. அதன்படி சனிக்கிழமை ஜூலை 1 ஆம் தேதி காலை முதல் மக்கள் கூடும் 9 முக்கிய இடங்களில் கடைகள் மூடப்பட்டு இருந்தன.
வியாபாரிகள் தங்களது கடைகளை திறக்க அனுமதிக்கப்படா ததால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க அப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் பொதுமக்கள் கூடாத வண்ணம் தனி மனித இடைவெளியை கடை பிடிக்க ஒலி பெருக்கி மூலம் காவல்துறையினர் அறிவுறுத்தி வருகிறார்கள்.

சென்னையில் கடைகள் மூடப்பட்ட பகுதிகளின் விபரம்:-
தி.நகர் ரெங்கநாதன் தெரு, வடக்கு உஸ்மான் சாலை, ஜாம்பஜார் மார்க்கெட் சாலை பகுதிகள், பாரிமுனை குறளகம், என்.எஸ்.சி. போஸ்சாலை பகுதிகள், ராயபுரம் மார்க்கெட், கல்மண்டபம் சாலை பகுதிகள், அமைந்தகரை மார்க்கெட் புல்லா அவென்யூ சாலை பகுதிகள், செங்குன்றம் மார்க்கெட் சாலை பகுதிகள் ஆகியவை மூடப்பட்டன. வருகிற 9 ஆம் தேதி வரை இப்பகுதிகளில் கடைகள் திறக்கப்படாது. கொத்தவால்சாவடி மார்க்கெட் பகுதியும் மூடப்படுகிறது.

;