tamilnadu

img

அரசு ஊழியர்கள் பிரச்சனையில் முதல்வர் தனிக்கவனம் செலுத்த வேண்டும்... சிஐடியு....

சென்னை:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர் சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு ஏற்படுத்த தமிழக முதல்வர் தனிக் கவனம் செலுத்திட வேண்டும் என்று சிஐடியுவலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சிஐடியு மாநிலத்  தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.  சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், கிராம உதவியாளர்கள், செவிலியர்கள், ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும்  3 லட்சத்துக்கும் மேற்பட்ட  ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட  ஊதியம் வழங்க வேண்டும். அரசு துறைகளில் உள்ள  4 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும்.  கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான  பழிவாங்கல் நடவடிக்கைகளை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கடந்த 2 ஆம் தேதி முதல் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் தினசரி ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மறியலில் பங்கேற்று வருகின்றனர்.

தங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில்  முழு ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறோம். போராடி வரும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் வென்றிட மாநிலம் முழுவதும் அனைத்துவிதமான ஆதரவு இயக்கங்களிலும் ஈடுபடுமாறு சிஐடியு இணைப்பு சங்கங்களை கேட்டுக்கொள்கிறோம்.அரசு ஊழியர்கள் மறியல் போராட்டத்தை துவங்கியவுடன் தமிழக முதல்வர்அரசு ஊழியர்-ஆசிரியர்கள்  மீதான வழக்குகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளதை சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வரவேற் கின்றோம். அதே நேரத்தில்  இதர கோரிக்கைகள் குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர் சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி  சுமூகத்  தீர்வுஏற்படுத்த தமிழக முதல்வர் தனிக் கவனம் செலுத்திட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

;