tamilnadu

img

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடை ரத்து - சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கோவையில் தனியார் வங்கியில் பணியாற்றிவந்த ரவி என்ற இளைஞர் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தொடர்ச்சியாக தோல்வியடைந்ததால், மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தில் மட்டும் ஆன்லைன் ரம்மியால் 3 பேர்  தற்கொலை செய்து கொண்ட 
நிலையில், ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடைவிதித்து, கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது.

அதன்படி, ஆன்லைன் ரம்மி விளையாடுவோருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும், 6 மாத சிறைத்தண்டனையும் அளிக்கப்படும். மேலும், ரம்மி விளையாட்டை நடத்தும் நிறுவனப் பொறுப்பாளர்கள் ரம்மி விளையாட்டரங்கம் வைத்திருந்தால், 10 ஆயிரம் அபராதத் தொகையும் 2 ஆண்டு சிறைத்தண்டனை என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனுசிங்வி, ஏ.கே. கங்குலி, ஆரியமா சுந்தரம், பி.எஸ்.ராமன், கடந்த 5 ஆண்டுகளில் ஆன்லைன் 
விளையாட்டிற்கு அடிமையாகி சில மரணங்கள் நிகழ்ந்ததால் இந்த விளையாட்டிற்குத் தடை விதித்ததாகத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கபட்டது. ஆனால், 
ஜல்லிகட்டு போட்டியின் போது ஒவ்வொரு ஆண்டும் 20 பேர் வரை பலியாவதாகவும், உச்ச நீதிமன்றமும் ஜல்லிக் கட்டிற்குத் தடை விதித்தும், மாநில அரசு சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்தி வருவதாகவும் வாதிட்டனர்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்கும் அரசு, ஆன்லைன் விளையாட்டிற்கு மட்டும் தடை விதித்து சட்டம் இயற்றி உள்ளதாகவும், இது திறமைகளுக்கான விளையாட்டு என்றும் சூதாட்டம் இல்லை என்றும் வாதிட்டனர். மேலும், எந்தவொரு காரணங்களும் இல்லாமல் இந்த தடை விதிக்கபடுள்ளதாகவும் தெரிவித்தனர்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், இந்த விளையாட்டால் நிறையப் பேர் ஏமாந்துள்ளதாகவும். பொது நலனைக் கருத்
தில் கொண்டு இந்த சட்டம் இயற்றபட்டதாகவும், சட்டத்தை இயற்ற அரசுக்கு அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந் ததை அடுத்து, தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்குகளின் தீர்ப்பை ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடைவிதித்துப் பிறப்பிக்கப்பட்ட சட்டத்தைச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்கமுடியாது எனவும், புதிய சட்டம் கொண்டுவரத் தமிழ்நாடு அரசுக்கு எந்த தடையும் இல்லை எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

;