tamilnadu

img

சட்டமன்ற நூற்றாண்டு விழா தொடங்கியது.... பேரவையில் கருணாநிதி படம் திறப்பு...

சென்னை:
கோலாகலமாக நடந்த தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் முன்னாள் முதலமைச்சர்  கருணாநிதியின் திருவுருவப் படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

தமிழக சட்டமன்றத்துக்கு என்று தனி சிறப்பு உண்டு. இந்திய ஜனநாயகத்தின் தூண்களில் முதன்மையான ஜனநாயக தூண் என்றால் அது தமிழக சட்டமன்றம் என்றே சொல்லலாம். எத்தனையோ விவாதங்களை  தன்னகத்தே கொண்டு இன்றும் தமிழக சட்டமன்றம் தனது ஜனநாயக கடமையை செவ்வனே நிகழ்த்திக் கொண்டு இருக்கின் றது.சென்னை மாகாணமாக இருந்த போது, அப்போது முதன்முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்ட சட்டப்பேரவை 1921ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதிதொடங்கப்பட்டது. அதனை சிறப்பிக்கும் வகையில் சட்டபேரவை நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையி லான தமிழக அரசு அறிவித்திருந்தது.

நூற்றாண்டு கண்ட தமிழக சட்டமன்றத்திற்கு விழா எடுக்க முடிவு செய்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதற்கான ஆயத்தப் பணிகளை கடந்த 19ஆம்தேதி தொடங்கினார். இந்த விழாவிற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் இந்திய நாட்டு வரலாற்றில் தான் போட்டியிட்ட சட்டமன்ற தேர்தல்கள் அனைத்திலும் வெற்றி பெற்றவரும் சட்டமன்றத்தில் பொன்விழா கண்டவருமான கருணாநிதியின் திருவுருவப் படத்தை திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டது.

விழாக்கோலம்...
இந்த விழாக்களை முன்னிட்டு, தலைமைச் செயலகம் முழுவதும் வெள்ளை அடிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டது. சட்டப் பேரவையை சுற்றியுள்ள சாலைகளும் புதிதாக போடப் பட்டன.2 மற்றும் 3-ஆம் எண் நுழைவு வாயில்கட்டடத்தின் மேல்புறத்தில்  ‘தமிழ் வாழ்க’ என்னும் வாசகம் அடங்கிய 2 பெயர் பலகைகள் புதிதாக வைக்கப் பட்டன. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், சென்னை மாநகராட்சி தலைமையகத்தின் மேல்பரப்பில் ‘தமிழ் வாழ்க’ என்னும் இரண்டு பெயா் பலகைகள் வைக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னை, தலைமைச் செயலக கட்டடத்திலும் புதிதாக ‘தமிழ் வாழ்க’ என்னும் இரண்டு பெயா் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.நூற்றாண்டு விழா மற்றும் படத்திறப்பு விழாவையொட்டி சட்டப்பேரவை வளாகம், தலைமைச் செயலகம் சாலை, போர் நினைவுச் சின்னம்,கோட்டைக்கு செல்லும் ராஜாஜி சாலையின் இருபுறமும்  மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. பேரவையின் முகப்பு நுழைவு வாயில்கள் அனைத்தும் வாழை தோரணங்கள், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டது. பேரவை வளாகம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

திங்களன்று (ஆக.2) மாலை 5 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் நடந்த சட்டப்பேரவையின் நூற்றாண்டு தொடக்க விழாவை  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் துவக்கிவைத்தார்.மேலும் முன்னாள் முதலமைச்சர்  கருணாநிதியின் திருவுருவப் படத்தையும் திறந்து வைத்து உரையாற்றினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலை வகித்து உரையாற்றினார். பேரவைத் தலைவர் அப்பாவு வரவேற்றார்.

விழாவில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, அவை முன்னவரும் நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான துரைமுருகன், திமுக மகளிர் அணி செயலாளரும் மாநிலங்களவை குழுத்தலைவருமான  கனிமொழி, டி.ஆர்.பாலு, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு தலைமைக் கொறடா கோவி செழியன், பேரவைச் செயலாளர் சீனி வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்த விழாவில் கலந்து கொள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், நீதிபதிகள், உயர் அதிகாரிகள்என 318 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இவர்கள் அமர்ந்து விழா நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு பேரவையில் 10 இடங்கள் வகைப்படுத்தப் பட்டிருந்தன.பேரவையின் மண்டபத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அமர வைக்கப்பட்டனர். மேல்மாடம், பால்கனி ஆகியவற்றிலும் வி.ஐ.பி.க்கள் அமர வைக்கப்பட்டனர். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உயர் அதிகாரிகள்பழைய அமைச்சரவை ஹாலில் அமர்ந்து பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆங்காங்கே எல்.இ.டி. ஸ்கிரீன் வைக்கப்பட்டிருந்தது. பேரவையில் இட நெருக்கடியை தவிர்ப்பதற்காக வழக்கமாக போடப்படும் மேசையை எடுத்துவிட்டு அங்கு ஷோபாக்கள் போடப்பட்டிருந்தன.

தலைவர்கள்
இந்த விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மதிமுகபொதுச் செயலாளர் வைகோ எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்தொல். திருமாவளவன் எம்.பி.,மனிதநேய மக்கள்கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன்,தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் கோ.க.மணி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள், திமுக தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதிமுக புறக்கணிப்பு
மறைந்த முதலமைச்சர்  ஜெயலலிதாவின் படத்திறப்பு விழாவில் பிரதமர் பங்கேற்ற நிகழ்வை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் சட்டமன்ற உறுப்பினர்களும் புறக்கணித்ததை காரணம் காட்டி, சட்டப் பேரவை நூற்றாண்டு மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்திறப்பு விழா நிகழ்ச்சியை அதிமுக  ஒட்டுமொத்தமாக புறக்கணித்தது.நூற்றாண்டு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்பதால் சட்டப்பேரவை வளாகம் முழுவதும்காவல்துறையின் முழு கட்டுப்பாட்டுக் குள் கொண்டு வரப்பட்டது. அவரது வருகையையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பாதுகாப்புப் பணியில் சுமார் 7000 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தலைமைச் செயலக ஊழியர்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மட்டுமே பணிபுரிய வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது.

முதல்வர் வரவேற்பு
சட்டமன்ற பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்க தில்லியிலிருந்து தனி விமானம் மூலம் குடியரசுத் தலைவர் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும், சில புத்தகங்களையும் அன்பளிப்பாக வழங்கினார்.ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், டிஜிபி சைலேந்திரபாபு, மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோரும் அவரை வரவேற்றனர்.

;