tamilnadu

img

சென்னை ஐஐடி-யில் தொடரும் சாதிய வன்முறை... தமிழக அரசு விசாரணைக்குழு அமைக்க கோரிக்கை....

சென்னை:
சென்னை ஐஐடி-யில் நடைபெறும் சாதியவன்முறை, மர்ம மரணங்கள், இடஒதுக்கீடு மீறல் குறித்து தமிழக அரசு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தி உள்ளது.சென்னை உள்ளிட்ட ஐஐடி-களில் இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்துவ தில்லை. ஆராய்ச்சி, முனைவர் படிப்புகளில் இட ஒதுக்கீடுகள் அப்பட்டமாக மீறப்படுவதை ஆய்வுகள், ஆர்.டி.ஐ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐஐடி-களுக்குள் சாதிய ஆதிக்கம் காரணமாக உயிரிழப்புகள் நிகழ்கின்றன. அண்மையில் சென்னை ஐஐடி உதவிப் பேராசிரியர் விபின், சாதிய அழுத்தத்தின் காரணமாக பணி விலகியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மதவெறி காரணமாக கேரளாவை சேர்ந்த மாணவி பாத்திமா லத்திப் உயிரிழந்தார். சில நாட்களுக்கு முன்பு கேரள மாணவர் ஒருவரின் உடல்பாதி எரிந்த நிலையில் முட்புதருக்குள்  கண்டெடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ஐஐடி-யில் தொடரும் அநீதிக்கு எதிராக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை, ஆதித்தமிழர் கட்சி, தமிழ்ப் புலிகள் கட்சி, ஐந்திணை மக்கள் கட்சி, திராவிடர் தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து புதனன்று (ஜூலை 5) தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தின.

‘மர்மக் கூடாரம்’

இதன் ஒருபகுதியாக சென்னை ஐஐடி அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப்போராட்டத்தில் செய்தியாளர்களிடம் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் கூறியதாவது:

மேலைநாடுகளில் படித்து ஐஐடி-யில் பணிக்கு சேர்ந்தால் கூட ஆதிக்க சக்திகளோடுபணியாற்ற முடியாத நிலை உள்ளது. ஐஐடி வளாகத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் படிக்க முடியாத நிலை உள்ளது.  ஐஐடி வளாகம் மர்மக் கூடாரமாக உள்ளது.2020ல் மட்டும் எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய 902 இடங்களை, பொது இடங்களாக மாற்றியுள்ளனர். கடந்த 70 ஆண்டுகளாக  சாதியஆதிக்கம், உழைக்கும் மக்களின் இடங்களை தொடர்ந்து பறித்துக் கொண்டு இருக்கிறது.

இவையெல்லாம் ஒன்றிய அரசு நிறுவனத்தில் நடக்கிறது என மாநில அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. ஐஐடியில் நடைபெறும் கொலை, இடஒதுக்கீடு மீறல் குறித்து கவனிக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கும் உள்ளது.ஐஐடியில் நடைபெற்றுள்ள ஒவ்வொரு பதவி விலகல், மரணங்கள், இடஒதுக்கீடு மீறல்கள் குறித்து தமிழக அரசு உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், எஸ்சி, எஸ்டிஆணையம் போன்றவை என்ன செய்கின்றன? இந்த பிரச்சனைகளில் சென்னை உயர்நீதி மன்றம் தாமே முன்வந்து விசாரிக்கவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.முன்னணியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் கே.மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, முன்னணியின் நிர்வாகிகள் கே.சுவாமிநாதன், ஜானகிராமன், பி.சுந்தரம், முரளி, சந்துரு, திராவிடர் விடுதலை கழக நிர்வாகிகள் ந.அய்யப்பன், உமாபதி, அம்பேத்கர் மக்கள் சக்தி கட்சி தலைவர் ராஜேந்திரன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் உத்திரன் உள்ளிட்டோர் பேசினர்.இதனைத் தொடர்ந்து ஐஐடி பதிவாளர், டீன் ஆகியோரை சந்தித்து முன்னணியின் நிர்வாகிகள் மனு அளித்தனர்.

;