tamilnadu

img

அதிமுக ஆட்சியில் தொடுக்கப்பட்ட வழக்குகள் வாபஸ்.... முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை:
கடந்த அதிமுக ஆட்சியின்போது சிஏஏ, வேளாண் சட்டங்கள், எட்டுவழிச் சாலைகளை எதிர்த்தும் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக ஊடகங்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப்பெறப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு ஜூன் 24 புதன்கிழமை யன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதி லளித்துப் பேசி, புதிய அறிவிப்புகளை வெளி யிட்டார்.கொரோனா நோய்த் தொற்று குறைந்துள்ளபோதும், அந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு சில பிரச்சனைகள் வருவதாகப் பலரும் தெரிவித்துள்ளனர். எனவே, வைரஸ் தொற்றில் இருந்து மீண்டெழும் அனைவரும் தொடர்ந்து சிகிச்சை பெறுவதற்கு அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் சிறப்பு சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என்றும் தேவைப்படும் உயர்சிகிச்சை மருத்துவர்களோடு இந்த மையங்கள் செயல்படும் என்றும் தெரிவித்தார்.

22 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு 
இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் தகுந்த வேலைவாய்ப்பு கிடைப்பதே அவர்களின் முன்னேற்றத்திற்கும் நம் தமிழ்ச் சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமையும் என்பதை உறுதியாக நம்புவதால், வளர்ச்சியில் பின்தங்கியுள்ள வட மாவட்டங்களில்  முதற்கட்டமாக, செய்யாறில் 12 ஆயிரம் பேருக்கும், திண்டிவனத்தில் 10 ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய பெரும் தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.

புதிதாக சமத்துவபுரங்கள்
ஏற்றத்தாழ்வை இடித்து, சமூகத்தை சமப்படுத்த போராடிய தந்தை பெரியார் பெயரால் கலைஞர் ஆட்சியில் 240 சமத்துவபுரங்கள் கட்டப்பட்டதை நினைவு கூர்ந்த முதலமைச்சர், அந்த சமத்துவபுரங்கள் சரியாக பராமரிக்கப்படாமல் உள்ளதால் அந்த சமத்துவபுரங்கள் உடனடியாக சீரமைக்கப்படும் என்றும் அதுமட்டுமல்ல, மேலும் புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

தேர்தல் அறிக்கையில், திருக்கோயில்களின் புனரமைப்புக்காக ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டது. முதற்கட்டமாக இந்த நிதியாண்டில் ரூ. 100 கோடி செலவில் திருக்கோயில்களைத் தொன்மை மாறாமல் புதுப்பிக்க, திருக்குளங்களைச் சீரமைத்து, திருத்தேர்களைப் புதுப்பித்து திருவிழாக்கள் நடத்த தேவையான பணிகள் 100 திருக்கோயில்களில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.கடந்த ஆட்சியில் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக ஊடகங்கள் மீது அரசு தொடர்ந்த வழக்குகள், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீதான வழக்குகள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்குஎதிராகப் போராடியவர்கள் மீதான வழக்குகள், மீத்தேன், நியூட்ரினோ, கூடங்குளம் அணு உலை, சென்னை-சேலம் எட்டுவழிச் சாலை ஆகிய திட்டங்களுக்கு எதிராக அறவழியில் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

;