tamilnadu

img

கொரோனா பாதுகாப்பு வழிமுறையுடன் ஆக.15 கிராமசபை கூட்டங்களை நடத்திடுக... தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்...

சென்னை:
கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி ஆகஸ்ட் 15 கிராமசபை கூட்டங்களை தமிழ்நாடுஅரசு நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வலியுறுத்தி யுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 12,13  ஆகிய தேதிகளில் சென்னையில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கட்சியின்  அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தரராசன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில்   நிறைவேற்றப்பட்ட தீர்மானம்  வருமாறு:வருகிற ஆகஸ்ட் 15 அன்று நடைபெற உள்ள  கிராம சபை கூட்டங்கள்கொரோனா பரவல் காரணமாக ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. கிராம சபை கூட்டங்கள் என்பது மக்கள் நேரடியாக பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளையும், தேவைகளையும் அரசுக்கு  தெரிவிக்கும் ஜனநாயகத்தின் மிக முக்கியமானதொரு வடிவம் ஆகும். எனவே கிராம சபை கூட்டங்கள் உரியமுறையில் நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருவதோடு, நோய்த் தொற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இத்துடன் ஏற்கனவே நடைமுறையில் உள்ள முழுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளும் நிலைமைக்கேற்ப படிப்படியாக தளர்த்தப்பட்டு வருவதோடு, கல்லூரிகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
இந்நிலையில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளோடு ஆகஸ்ட் 15 அன்று தமிழ்நாடு முழுவதும் கிராமசபை கூட்டங்களை நடத்திட முன்வர வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;