tamilnadu

img

தீவிரமல்லாத நோயாளிகளுக்கு சித்த, ஆயுர்வேத சிகிச்சையை பயன்படுத்த முயற்சி.... சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்....

சென்னை:
மதுரை, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்துகளை விற்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் (மே 8) ஆய்வு மேற்கொண்டார். அப்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது:-

“ரெம்டெசிவிர் மருந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அது பிரித்து விற்கப்பட வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.எனவே, மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களிலும் ரெம்டெசிவிர் மருந்துகளை விற்பதற்கு உண்டான வழிகளை ஏற்படுத்தி, மருந்துகள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு விற்பனைக்குத் தயாராக உள்ளன.தனியார் மருத்துவமனைகளில் ஏழை, எளிய மக்களுக்கு கொரோனாவுக்கு முதல்வர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் இலவச சிகிச்சை அளிக்க முதல்வர் அறிவித்துள்ளார்.முழு ஊரடங்கின்போது மருத்துவ சேவைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போடுவதும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் தொடர்ந்து நடைபெறும்.

ஆம்புலன்சில் வரும் நோயாளிகளை விரைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.சித்த மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாய்வு நடத்தி, தீவிரமல்லாத நோயாளிகளுக்கு சித்த, ஆயுர்வேத சிகிச்சையை பயன்படுத்திக்கொள்ள முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.இறந்தவர்களை புதைக்கவோ, எரிக்கவோ உறவினர்கள் காத்திருப்பது போன்றவை, வட இந்திய பத்திரிகைகளில் உள்ள செய்திகள். தமிழகத்தில் அந்த நிலை இல்லை, வரவும் வராது.கடந்த 200 ஆண்டுகளாக வட சென்னை மக்களுக்கு மருத்துவ சேவை அளித்துக்கொண்டிருக்கும் மிகப்பெரிய மருத்துவமaனை ஸ்டான்லி அரசு மருத்துவமனை.இந்த மருத்துவமனை ஏறத்தாழ 1,500 படுக்கைகளுடன் மிக சிறப்பாக இயங்கி வருகிறது. இங்கு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,500-க்கும் மேற்பட்டவர்களுக்கு மிக சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்குத் தேவையான சிகிச்சை சிறப்பாக அளிக்கப்படுகிறது. இம்மாதிரியான ஆய்வுகளை தொடர்ந்து நடத்தி பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த மருத்துவமனையில் வரும் 10ஆம் தேதி முதல் புதிதாக செயல்படவிருக்கிற 500 ஆக்சிஜன் படுக்கைகள், ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனை கூடம் ஆகியவற்றை பார்வையிட்டோம். கோவிட் தொற்றாளர்கள், பொதுமக்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை கேட்டறிந்தோம்.இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

;