tamilnadu

img

செய்தி சேகரிக்கும் ஊடகத்தினரை தாக்குவதா..? காவல்துறையினரின் கண்மூடித்தனமான நடவடிக்கைக்கு சிபிஎம் கடும் கண்டனம்

சென்னை,பிப்.26-

தீக்கதிர் நாளேட்டின் செய்தியாளரை காவல்துறையினர் செய்தி சேகரிக்க விடாமல் தடுத்து, தாக்கியுள்ளனர். காவல்துறையினரின் இத்தகைய நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

நெடுஞ்சாலை துறையினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  சென்னையில்  நெடுஞ்சாலைத்துறை இயக்குநர் அலுவலகம் முன்பாக இன்று  (26.2.2021) நடைபெற்று வரும் ஊழியர்களின் போராட்டம் குறித்த செய்திகளை சேகரிக்கச் சென்ற தீக்கதிர் நாளேட்டின் செய்தியாளர்  கவாஸ்கரை காவல்துறையினர் செய்தி சேகரிக்க விடாமல்  தடுத்ததோடு, தாக்கியும், அவரது புகைப்பட காமிராவையும் பறித்தும் சென்றுள்ளனர். காவல்துறையினரின் இத்தகைய நடவடிக்கை மிக  கண்டனத்திற்குரியதாகும்.
 
ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றாக பாவிக்கப்படுகிற செய்து  மற்றும் ஊடகத்தினரிடம் அண்மைக்காலமாக இத்தகைய மோசமான தன்மையில் காவல்துறையினர் நடந்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. இம்மாதத்தில் மட்டும் நான்கு முறை பல்வேறு இடங்களில்  ஊடகத்தினர் இத்தகைய முறையில் காவல்துறையினரால்  தாக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது காமிரா உள்ளிட்ட உடமைகள் பறித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.   மாநிலத்  தலைநகரான சென்னையில் ஒவ்வொரு நாளும் பல்வேறு  கோரிக்கைகளை முன்வைத்து பல தரப்பினரும் போராட்டங்களை  நடத்தி வருகின்றனர். அங்கெல்லாம் செய்தி சேகரிக்க செல்லும்  பத்திரிக்கையாளர்களிடம்  இத்தகைய மோசமான முறையில்  கண்மூடித்தனமாக  காவல்துறையினர் நடந்து கொள்வதை ஏற்றுக்  கொள்ள முடியாது.

எனவே, தமிழக அரசும், காவல்துறை தலைவர் அவர்களும்  இப்பிரச்னையில் உடனடியாக தலையிட்டு, இத்தகைய மோசமான  நடவடிக்கைகள் நடைபெறா வகையில் தடுக்க வேண்டும் என்பதோடு,பத்திரிக்கை மற்றும்  ஊடகத்தினரிடம் கண்மூடித்தனமான முறையில் நடந்து கொள்ளும் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

;