tamilnadu

img

மயிலாடுதுறையில் பட்டியல் இனப் பெண்கள் மீது தாக்குதல்... வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்க: சிபிஎம்....

சென்னை:
மயிலாடுதுறையில் பட்டியலினபெண்களை தாக்கியவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்திட வேண்டும் என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை :

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகேயுள்ள நரசிங்க நத்தம் எனும் கிராமத்தில் வசித்து வரும் பட்டியலின மக்களின் வீடுகள் அண்மையில் ஒரு தீ விபத்தில் சேதமடைந்துள்ளன.அதனை தொடர்ந்து நரசிங்க நத்தம், கீழ்க்காலனி, சாமியங்குப்பம் ஆகிய பகுதிகளைச் சார்ந்த  நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அருகில் உள்ள மந்தை திடலில்குடிசைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த மேல்சாதியினர் அந்நிலங்களை ஆக்கிரமிக்கும் முயற்சியோடு, குடிசை அமைக்க விடாமல் தடுத்தும் உருட்டுக்கட்டை, கொம்புமற்றும் ஆயுதங்களோடு மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் இரண்டு பெண்கள் உட்பட பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் இது வரை கைது செய்யாதது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

பட்டியலின மக்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய சாதிவெறியர்கள் மீது உடனடியாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலி யுறுத்துகிறது.இந்த தாக்குதலின் போது பாதிக்கப் பட்டவர்களுக்கும், வீடிழந்தவர்களுக்கும் வீட்டுமனை வழங்கிடவும், உரிய இழப்பீடுகள் வழங்கிடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசைவலியுறுத்துகிறது.

;