tamilnadu

img

9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு....

சென்னை:
9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி, வாக்குப்பதிவு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாகப் பிரிக்கப்பட்ட வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில்  செப்.15-க்குள்  ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது.இதற்கான ஆயத்தப் பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையம்  மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த 31-ஆம் தேதி 9 மாவட்டங்களுக்கான வாக்காளர் பட்டியல் விவரங்களை மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. மேலும், ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநிலத் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.

இந்நிலையில், 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் கூறியதாவது:

“வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக அக்டோபர் 6 மற்றும் 9-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். வேட்புமனுத் தாக்கல் நாளை (செப்.15) தொடங்கி செப்.22-ஆம் தேதி வரை நடைபெறும். 23-ஆம் தேதியன்று வேட்பு மனுக்கள் ஆய்வு செய்யப்படும். 25-ஆம் தேதி அன்று வேட்பு மனுவைத் திரும்பப் பெறலாம். வேட்பு மனுக்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பெறப்படும்.வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கடைசி 1 மணி நேரம்வாக்களிக்கலாம். கொரோனா பாதுகாப்பு வழிமுறை களை முழுமையாகப் பின்பற்றியே தேர்தல் நடைபெறும்.தற்செயல் தேர்தல் நடைபெற உள்ள ஏனைய 28 மாவட்டங்களில் அக்டோபர் 9-ம் தேதி நடைபெறும். அக்டோபர் 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். உடனடியாக அமலுக்கு வரும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அக்.16-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். 9 மாவட்டங்களுக்கும் தனித்தனி ஐஏஎஸ் அதிகாரிகள் பார்வையாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர்”. இவ்வாறு மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்தார். 

;