tamilnadu

img

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக்கப்படுவர்.. இந்துசமய அறநிலையத்துறை அமைச்சரின் அறிவிப்புக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்பு....

 சென்னை:
தமிழகத்தில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக்கப்படுவார்கள் என்று தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பினை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்றுள்ளது. இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த. செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழகத்தில் 1970 ஆம் ஆண்டு திமுகஆட்சியின்போது,   அனைத்து சாதியினரும்அர்ச்சகராக்குவதற்கான சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் சனாதனவாதிகள் தொடுத்த வழக்கின் காரணமாக அதை நிறைவேற்ற முடியாமல் போனது.  இந்நிலையில் 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் மீண்டும் சட்டம்  இயற்றப்பட்டது.  2007-2008 ஆண்டுகளில் சைவ வைணவ ஆகமப்பாடங்களில் அர்ச்சகர் பயிற்சி அளிக்கக்கூடிய ஓராண்டு பட்டயப் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. பட்டியலின, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, முற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்த 207 மாணவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டு பட்டயமும் வழங்கப்பட்டது. மீண்டும் சனாதனவாதிகள் உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் தொடுத்த வழக்கின் காரணமாக நியமனம் தடைபட்டு வந்தது. இந்நிலையில்  100 நாட்களில் அனைத்துச்சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கும் விதத்தில்கருத்து தெரிவித்துள்ள தமிழக அறநிலையத்துறை அமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. 

தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் என்று வர்ணிக்கப்படுகிற இப்பிரச்சனையில் இனியும் காலம் தாழ்த்தாமல் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பயிற்சிமுடித்துள்ள அனைவரையும் அர்ச்சகராக்கிடவேண்டும். பட்டயம் பெற்று அர்ச்சகர் பணிக்குத் தயாராக உள்ள அனைவருக்கும் ஒரே நியமன உத்தரவு மூலம் பணிகள் வழங்கிட வேண்டும். இந்நியமனங்களில் பினராயி விஜயன் தலைமையிலான கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் நடைமுறையை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும். அதாவது அர்ச்சகர் பணி என்பதுஅரசுப் பணி. இதர அரசுப் பணிகளைப் போலவே பொது விளம்பரம், தேர்வு, பணி நியமனம், பணி நியமனத்தில் இடஒதுக்கீடு ஆகியவை பின்பற்றப்பட வேண்டும். அதே போல், கேரளாவில் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்குட்பட்ட பெரிய கோவில்களில் நியமிக்கப்பட்டதை போல் தமிழகத்திலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்,சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்போன்ற பெரிய கோவில்களிலும் இந்நியமனம் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும்.   இவ்வாறு  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;