tamilnadu

img

ஆகமங்கள் காலத்திற்கு காலம் மாறி வந்துள்ளன.... சாதி- பாலின வேறுபாடின்றி அர்ச்சகர் ஆக்குக.... தமுஎகச கருத்தரங்கில் அறிஞர்கள் கருத்து....

அனைத்துச் சாதியினரையும் பாலின வேறுபாடு இன்றி அர்ச்சகர்களாக்கவேண்டும் என்றும் அரசு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழில் அர்ச்சனை  உரிமையைஉறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் சார்பில் இணையவழியில் கருத்தரங்கம் நடைபெற்றது. 

இதற்கு தலைமையேற்று சங்கத்தின் மாநிலத் தலைவர் (பொறுப்பு) மதுக்கூர் இராமலிங்கம் பேசுகையில், 

திமுக அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு பல நல்ல அறிவிப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.  அவற்றில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் வெளியிட்ட மூன்று முக்கியஅறிவிப்புகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.நூறு நாள்களுக்குள் அனைத்துச் சாதியினரை யும் அர்ச்சகராக்குவோம், தமிழில் அர்ச்சனை, பெண்கள் பயிற்சி பெற விரும்பினால் அவர்களுக்கும் அர்ச்சகராகும் வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. பிறப்பை அடிப்படை தகுதியாக எந்தவொரு தொழிலுக்கு நிர்ணயித்தாலும் அதை தமுஎகச எதிர்த்து போராடும் அரசு அறிவித்துள்ள படி, நூறு நாட்களுக்குள் அனைத்து சாதியினரையும் பாலின வேறுபாடின்றி அர்ச்சகராக்கவும், தமிழில் அர்ச்சனை செய்வதை உறுதிப்படுத்தவும் வேண்டும் என்றார்.

                                       *******************

 

அமைப்பின் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா அறிமுக உரையாற்றுகையில்,

தமுஎகச இந்தப் பிரச்சனைகளை சமூகநீதியில் ஒரு கூறாகவும், பண்பாட்டு ரீதியில் ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்கு உரிமைகள் மறுக்கப்படுவதற்கு எதிராகவும் பார்க்கிறது. கடவுள் வழிபாட்டில் நம்பிக்கை கொண்டவர்களும் இந்த கோரிக்கை களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

                                       *******************

ஆகம அறிஞர் முதுமுனைவர் மு.பெ.சத்திய வேல் முருகனார் துவக்கவுரையாற்றுகையில், 

கோயில்களில் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் ஆவதற்குத் தடுப்பவர்கள் யாவர்?  அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?  வடவேத பிராமணர்களுக்கும் வேதங்களுக்கும் கோயிலே கிடையாது.  அவர்கள் எப்படி நம்மைக் கோயிலுக்குள் அனுமதிக்க மறுக்கலாம். தீட்சை பெற்ற அனைவரும் அர்ச்சகராகலாம் என்று ஆகமம் கூறுகிறது.  அரசு உருவாக்கிய அர்ச்சகர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள், தீட்சை பெற்றிருக்கிறார்கள். சிவாகமத்தில் குறிப்பிட்ட சாதியினர்தான் பூசை பண்ண வேண்டும் என்று இல்லவே இல்லை. ஆகமத்தின் 48 ஆம் அத்தியாயத்தில் சாமிநாதத்தில் அர்ச்சகருக்குக் கோத்திரமே இல்லை என்று கூறுகிறது.  பெண்கள் அர்ச்சகர்களாகக் கூடாது என்று எப்படிச் சொல்லலாம்.  சிவாகமத்தில் எங்குமே இப்படிக் குறிப்பிடவே இல்லை. திருப்பனந்தாள் சிவாச்சாரியர் மனைவி தாடகை பூசை செய்ய லிங்கமே வளைந்து கொடுத்தது என்று புராணம் குறிப்பிடுகிறது. அயவந்திநாதர் கோயிலில் திருநீதநக்கர் என்னும் சிவாச்சாரியார் மனைவி லிங்கத்தின் மீது சிலந்தி வலை பின்னியிருப்பதை வாயால் ஊதி அப்புறப்படுத்துகிறார் என்பது புராணம்.  பெண்களின் மூன்று நாள் மாதவிலக்கு என்பது கடவுளுக்குப் பொருந்தவே பொருந்தாது என்றார். 

                                       *******************

தமுஎகசவின் மாநிலத் துணைத் தலைவர் சிகரம் ச. செந்தில்நாதன் பேசுகையில்,

தமிழ்நாட்டில் 42000 கோயில்கள்.  5000 கோயில்களில் ஆகம விதிகள் பின்பற்றப்படுவதாகச் சொல்கிறார்கள்.  இதுவும் தவறு. இப்போது பயிற்சி பெறாத பலரும் அர்ச்சகர்களாக இருக்கிறார்கள். சைவ, வைணவ, அம்மன்கோயில்களில் பயிற்சி பெறாத பலரும் அர்ச்சகர்களாக இருப்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள். சைவக் கோயில்கள் 17, வைணவக் கோயில்கள் 6, பிற கோயில்கள் 9 என சில கோயில்களில் ஆய்வு நடத்திய நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. சங்கரர் வழி வந்ததாக இருப்பவர்கள் ஸ்மார்த்த பிராமணர்கள்.  இவர்களும் பயிற்சி பெறப்படாதவர்களும் இப்போது பல கோயில்களில் அர்ச்சகர்களாக இருக்கிறார்கள். அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கக் கூடாது என்றும் பெண்கள்  வரக் கூடாது என்றும் தமிழில் அர்ச்சனை கூடாது என்றும் தடை சொல்வதற்குத்தான் ஆகமம் என்பதைப் பூச்சாண்டியாகப் பயன்படுத்துகிறார்கள். ஜனவரி 1 ஆம் தேதி கோயில்களில் பூசை செய்கிறார்கள்.  எந்த ஆகமத்தில் இது குறிக்கப்பட்டிருக்கிறது?

 கோயில்களுக்குள் யாகம் செய்யக் கூடாது.  ஆனால் தமிழ்நாட்டில் கோயில்களுக்குள் யாகம் செய்வதை எந்த ஆகமத்தின்படி செய்திருக் கிறார்கள்? சிவன் கோயிலில் பிள்ளையார் சிலைகள் எப்படி வந்தன? பிள்ளையார் பிற்காலத்தில் கொண்டுவரப்பட்டது.  பிள்ளையாருக்கு ஆகமம் கிடையாது. எந்த ஆகமத்தின் அடிப்படையில் இது நிகழ்ந்தது? கள்ளழகர் மார்கழியில் ஆற்றில் இறங்கியவர் இப்போது வேறு மாதத்தில் எப்படி இறங்குகிறார்.  இது ஆகம மீறல் இல்லையா?
தமிழ்நாட்டில் மிகப் பெரிய ஆலயப் பிரவேசங்கள் நடந்திருக்கின்றன.  அரசியல் சட்டம் தீண்டாமையை ஒழித்துவிட்டது. ஆனால் கருவறைத் தீண்டாமை தொடர்கிறது. புதிய புதிய கடவுள்கள் வருகிறார்கள்.  நவக்கிரகம் இருந்தால் அந்தக் கோயில் ஆகம விதி மீறப்படுகிறது.  சிவா விஷ்ணு கோயில் என்று எப்படி வந்தது.  இப்படி ஆகம மீறல்கள் தொடர்ந்துநடந்தே வந்திருக்கிறது. பக்தர்கள் விரும்பி பல விஷயங்கள் செய்கிறார்கள்.  இதில் ஆகமம் கடைபிடிக்க முடிவதில்லை.  ஆகமக் கோயில்கள் என்று எந்தக் கோயிலையும் சொல்ல முடியாத சூழல்தான் உள்ளது. எனவே ஆகமத்தைக் காட்டி மறுக்க முடியாது என்றார்.

                                       *******************

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் வா.ரங்கநாதன் பேசுகையில், 

தீண்டாமை கோயில்களிலும் கடைபிடிக்கப் பட்டதால் பெரியார் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தார்.  தமிழ்நாட்டில் சைவ முறைப்படி 4, வைணவ முறைப்படி 2 பயிற்சிக் கூடங்கள் வைத்திருந்தனர்.  அனைத்து மாணவர்களும் கோயில்களில் கடவுளைத் தொட்டு பூசை செய்ய விரும்புபவர்கள்.  இடஒதுக்கீடு முறையில் எல்லா சாதியினரைச் சேர்ந்தவர்களுக்கும் பயிற்சிக்கு வாய்ப்பு இருக்கிறது.  அர்ச்சகர் பயிற்சியின்போது, சமஸ்கிருதத்தில் வகுப்பெடுக்க முதலில் யாரும் வரவில்லை. பல இடையூறுகளையும் உயர் சாதிக்காரர்களின் வன்முறைத் தலையீடுகளையும் மீறி தமிழ் முறைப்படியும் சமஸ்கிருத முறைப்படியும் அனைத்துப் பயிற்சிகளையும் எடுத்துக் கொண்டுள்ளோம்.
அனைத்துச் சாதியினரையும் பூசை செய்ய அனுமதித்தால் சாமி தீட்டுப் பட்டுவிடும் என்று சொல்லி வழக்கில் தடை வாங்கியிருக்கிறார்கள்.  இந்து மதத்திலும், சட்டத்திலும் அனைவரும் சமம் என்கிறோம்.  ஆனால் தீட்டு என்று எப்படிச் சொல்கிறார்கள்?. 100 நாட்களில் பணி நியமனம் உறுதி என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.  நாங்கள் தமிழில் பூசை செய்கிற தகுதியுடனும் இருக்கிறோம்.சமூக நீதியை நிலைநாட்டவும், சமத்துவத்தைக் கடைபிடிக்கவும்  இட ஒதுக்கீடு முறையில் எங்களுக்குப் பணி நியமனம் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் என்றார்.

வழக்கறிஞர் அஜிதா பேசுகையில், 

சைவம், வைணவம் இரண்டுமே வெவ்வேறு நெறிமுறைகள் கொண்டவை.  ஆகமங்கள் பின்னாளில் வந்தவையாக இருக்கின்றன.  மூலத்தை எரித்துவிட்டு பின்னால் சேர்க்கப்பட்டவையாக இருக்கின்றன. 9 ஆகமங்கள் இருப்பதாக திருமூலர் மூலம் அறிகிறோம்.  அரசியல் சாசனச் சட்டத்தின் படி தீண்டாமையை எதிர்த்துத்தான் அரசு அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டத் திருத்தம் கொண்டுவந்திருக்கிறது. அரசியல் சட்டத்தின் 26, 27 பிரிவுகளின்படி சில பொருளாதார, சீர்திருத்த மாற்றங்கள் கொண்டு வருவதற்கு அரசு செய்கிறபோது அது தனிப்பட்ட வழிபாட்டு உரிமையில் தலையிடக் கூடாது என்று சொல்லி வாதிடுவது தவறான வாதம்.  இதைக் கணக்கில் கொண்டுதான் பாலினபாகுபாடின்றி அவர்கள் தங்கள் வழிபாட்டு உரிமையை மேற்கொள்வதற்கு எந்தத் தடையுமில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. ஆந்திரா, கேரளாவிலும் இப்படித்தான் தீர்ப்பளிக்கப் பட்டிருக்கிறது. மனிதர்களுக்கு இடையில் பிரிவு ஏற்படுத்துகிற மதத்தின் அதிகாரத்தை அனுமதிக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட குழுவின் எதேச்சாதிகாரத்திற்கு எதிரான குரல்தான் இன்றைய தமிழக அரசின் குரல்.  இது அரசியல் சட்டத்தின் படி, பெரியாரின் படி, அண்ணல் அம்பேத்கரின் படி ஆதரிக்கப்பட வேண்டிய ஒன்று.சமஸ்கிருத மூலமாக பூசை செய்தால்தான் ஏற்பு என்று நினைக்கிற தமிழ் மனங்கள் மாற்றமடைய வேண்டிய அவசியம் இருக்கிறது.  அதையும் நாம் முன்னெடுத்தாக வேண்டும்.

                                       *******************

இந்து சமய அறநிலையத்துறை ஓய்வுபெற்ற இணை இயக்குநர் எஸ்.ஜெயராமன் பேசுகையில், 

அனைத்துச் சாதியினரும் கோயிலுக்குச் செல்ல எந்தத் தடையும் இல்லை. வைணவத்தில்திருப்பாணாழ்வார் சைவத்தில் திருநாளைப்போவார் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள்.  மடப்பள்ளிகளில் மண்ணெண்ணெய் காஸ் பயன்படுத்தக் கூடாது.  விறகுகள்தான் பயன்படுத்த வேண்டும்.  எல்லாமே மாறிவிட்டது.  ஆச்சாரத்தை ஆச்சாரம் என்று சொல்கிறவர்கள்தான் முதலில் மாறியிருக்கிறார்கள்.  எவர் சில்வர் பாத்திரங்கள் எப்படி நுழைந்தன.  சமூக மாற்றங்களுக்கு ஏற்றவாறு எல்லாமே மாறிக் கொண்டு வருகின்றன.மின்விளக்குகள் வரும்போது எதிர்த்தார்கள்.  ஆனால் இப்போது மின்விளக்குகள் எரியவில்லை எனப் புகார் செய்கிறார்கள். மாலைகளில் கூட பல மாற்றங்கள் வந்துவிட்டன.  பூஜைமுறைகளில் பூஜை பயன்பாடுகளில் எல்லாம் மாற்றங்கள் வந்துவிட்டன.  சமூக மாற்றத்திற்கு ஏற்றவாறு அனைவரும் சமம் என்ற முறையில் ஆகமங்களில் மாற்றங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றார். நிறைவாக கீழ்க்கண்ட தீர்மானங்களை சங்கத்தின் மதிப்புறு தலைவர் உ.தமிழ்ச்செல்வன் முன்மொழிய அனைவரும் வழிமொழிந்து நிறைவேற்றினர்.

                                       *******************

தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்ச்சமூகம் பண்பாட்டிலும் சமூகநீதியிலும் ஓரங்கமான வழிபாட்டுரிமையை அடைவதில் அரை நூற்றாண்டுகாலமாக பல்வேறு தடைகளைஎதிர்கொண்டுவருகிறது. அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தின் கீழ் பயிற்சிபெற்றவர்கள் கடந்த 14ஆண்டுகளாக பணிய மர்த்தப்படாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். தமிழில் குடமுழுக்கு, தமிழில் அர்ச்சனை என்கிற இயல்பான எளிய உரிமைகளுக்காகக்கூட உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்காடி வென்றுவர வேண்டியுள்ளது. தீர்ப்பினைப் பெற்றாலும் நடைமுறைப்படுத்துவதில் இடர்ப்பாடு நீடிக்கிறது. இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு அரசு அர்ச்சகர் பயிற்சிபெற்ற அனைத்துச் சாதியினரையும், பயிற்சி முடிக்கிறபெண்களையும் 100 நாட்களில் பணியமர்த்துவ தாக செய்துள்ள அறிவிப்பை இந்தக் கருத்தரங்கின் மூலம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வரவேற்கிறது. அரசின் அறிவிப்பு வெளியானதும் பாலினப்பாகுபாடின்றி மாற்றுப்பாலினத்தவரையும் அர்ச்சகராக்க வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கையின் நியாயத்தையும்  அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என இக்கருத்தரங்கம் வலியுறுத்துகிறது. இதேபோல தமிழில் குடமுழுக்கு செய்வதற்கும், தமிழில் அர்ச்சனை செய்வதற்கும் முன்னுரிமை வழங்கவேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை இக்கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.

தொகுப்பு – நா.வே.அருள்

;