tamilnadu

அரசியல் சட்ட விதிகளுக்கு எதிரான புதிய திருத்த விதிகளை பார் கவுன்சில் திரும்பப்பெறுக.. அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தல்....

சென்னை:
கருத்துச் சுதந்திரம், அரசியலமைப்பு சட்ட விதிகளுக்கு எதிரான புதிய திருத்தவிதிகளை அகில இந்திய பார் கவுன்சில் திரும்பப்பெற வேண்டும் என்று அகில இந்தியவழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநில செயல்தலைவர் ஏ.கோதண்டம், மாநிலப் பொதுச்செயலாளர் என்.முத்து அமுதநாதன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

அகில இந்திய பார்கவுன்சில் வெளியிட்டுள்ள திருத்தவிதிகளுக்கு அகில இந்தியவழக்கறிஞர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு தனது எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறது. பார்கவுன்சிலின் முடிவுகளை வழக்கறிஞர்கள், மாநில பார்கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் அகில இந்தியபார்கவுன்சில் உறுப்பினர்கள் உட்படயாரும் ஊடகம், பத்திரிகை மற்றும் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யக்கூடாது என்றும் அவ்வாறு விமர்சித்தால் அவர்கள் ஒழுங்கீனமானவர்கள்  என கருதிநடவடிக்கை எடுக்கப்படும் என  அகில இந்திய பார்கவுன்சில் திருத்த விதிகளை ஜூன் 23 அன்று அறிவிக்கையாக வெளி யிட்டுள்ளது. 

இந்த திருத்த விதிகள் அரசியலமைப்பு சட்டம் பிரிவுகள்19 (1) (ஏ) மற்றும்  19(2) வழங்கியுள்ள கருத்து  சுதந்திரம் மற்றும்சுதந்திரமாக எண்ணத்தை வெளிப்படுத்தும் உரிமைகளுக்கு விரோதமானதாகும். இந்த திருத்தங்களுக்கு இந்தியதலைமை நீதிபதியின் அனுமதி கட்டாயம் பெற வேண்டிய நிலையில் அதுபற்றி எந்த குறிப்பும் அறிவிக்கையில் இல்லை. விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று திருத்தவிதி மாநில பார் கவுன்சில்களின் விசாரணை அதிகாரத்தை பறிப்பதாகும். மேலும் வழக்கறிஞர்கள் சட்ட விதிகளுக்கு புறம்பானதாகும். தவறு செய்யும்வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கதற்போதைய சட்டவிதிகளில் பார் கவுன்சிலுக்கு அதிகாரம் உள்ள நிலையில் புதிய திருத்தவிதிகள் அவசியமற்றது ஆகும்.எனவே அரசியல் அமைப்பு சட்டவிதிகளுக்கு விரோதமான, வழக்கறிஞர் சட்டத்திற்கு எதிரான, ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்கு எதிரான புதிய சட்டதிருத்த விதிகளை அகில இந்திய பார்கவுன்சில் உடனே திரும்பப்பெற வேண்டும் .இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;