tamilnadu

img

மழை பாதிப்புகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென சிபிஎம் கோரிக்கை

மழை பாதிப்புகளினால் வீடுகள் இடிந்தும், மின்சாரம் தாக்கியும், உயிரிழந்தவர்களுக்கு தலா இருபது லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டக்குழு கோரியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட செயற்குழு மற்றும் மாவட்டக்குழுக் கூட்டம் தஞ்சையில் நடைபெற்று வருகிறது. கூட்டங்களின் முடிவுகளை விளக்கி கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறியதாவது:

“கடந்த 20 நாட்களுக்கு மேலாக தஞ்சை மாவட்டம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் மழையினால் விவசாயப் பயிர்களுக்குக் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக, வட கிழக்கு பருவ மழையைப் பொறுத்த அளவில் அக்டோபர் பிற்பகுதியில் தொடங்கி நவம்பர் மற்றும் டிசம்பர் முற்பகுதி வரை பெய்யும். இதனால்தான் மக்கள் மத்தியில் ஐப்பசி, கார்த்திகை அடை மழை காலம் என்ற சொலவடையும் ஏற்பட்டது. இதற்கேற்ற வகையில்தான் பயிர் சாகுபடி முறைகளும் அமையும். ஆனால் இவ்வாண்டு, வழக்கத்திற்கு மாறாக பருவம் தவறிய மழையாக டிசம்பர் பிற்பகுதியிலிருந்து ஜனவரி 17 வரையில் தொடர்ந்து பெய்த பெரு மழை வெள்ளத்தால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம், குறிப்பாக நெற்பயிர் முற்றாக அழிந்துபோயுள்ளது. புஞ்சை தானியப் பயிர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. தஞ்சை மாவட்டம் முழுவதும் ஒட்டுமொத்த நெல் சாகுபடியும் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளன.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டுதான் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்பட்டது. மாவட்டத்தில் பரவலாக குறுவை சாகுபடி செய்யப்பட்டது. நல்ல விளைச்சலும் கண்டு, அறுவடையான குறுவை நெல்லை அரசு கொள்முதல் செய்வதில் ஏற்பட்ட காலதாமதம் மற்றும் குளறுபடிகளினால் ஆங்காங்கே நெல்மூட்டைகள் தேங்கி மழைநீரில் நனைந்து வீணாகிவிட்டன.  அடுத்து சம்பா சாகுபடியும் நன்கு விளைந்து அழிந்துபோய்விட்டது. இதனால் விவசாயிகள் சொல்லொண்ணா துன்ப துயரங்களில் ஆழ்ந்துள்ளனர்.

எனவே விவசாயிகளின் துயரத்தைத் துடைப்பதற்கு ஏற்றவகையில் அரசு நிவாரணம் வழங்கிட வேண்டும்.  நெல் சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு அரசு நிர்ணயித்துள்ள வங்கிக் கடன் அளவு (Scale of finance) 33 ஆயிரத்து 500 ரூபாயாகும். விவசாயிகள் இதற்கு மேலாகவும் செலவு செய்துள்ளார்கள். எனவே நெற்பயிர் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு இழப்பீட்டுத்தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும்.

நெற்பயிர் அழிந்துபோன அனைத்து விவசாய நிலங்களுக்கும் உச்சவரம்பு எதுவும் நிர்ணயிக்காது, அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைத்திட அரசு உறுதி செய்திட வேண்டும். பாதிக்கப்பட்ட ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கி விவசாயிகளின் துயரத்தைப் போக்கிட வேண்டும்.

மேலும் தஞ்சை மாவட்டத்தில் தெற்குப் பகுதியில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி தாலுக்காக்கள் உள்ளடங்கிய மேட்டுப்பாங்கான நிலங்களில் செய்யப்பட்ட புஞ்சை தான்யப் பயிர்களும் அழிந்துபோயுள்ளன. குறிப்பாக நிலக்கடலை, எள், உளுந்து, பயறு வகைகள் மக்காச் சோளம் உள்ளிட்ட பயிர் இழப்புகளுக்கு அரசு முழு நிவாரணம் வழங்கிட வேண்டும்.

கூட்டுறவு வங்கிகள் மற்றும் வணிக வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்திட வேண்டும். தொடர் மழை பாதிப்புகளினால் வீடுகள் இடிந்தும், மின்சாரம் தாக்கியும், உயிரிழந்தவர்களுக்கு தலா இருபது லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி,  மாவட்டத்தின் அனைத்து ஒன்றியத் தலைநகர்களிலும் வரும் ஜனவரி 30 அன்று பெரும்திரள் ஆர்ப்பாட்டம் நடத்திடவும் தீர்மானிக்கப்பட்டது.

இவ்வாறு தஞ்சை மாவட்டக்குழு முடிவு எடுத்துள்ளதாக பி.சம்பத் கூறினார். கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் உடன் இருந்தார்.

முன்னதாக பி.சம்பத், அம்மாபேட்டை ஒன்றியம், கோவிலூர்,  ராராமுத்திரக்கோட்டை கிராமங்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட நிலங்களைப் பார்வையிட்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்தித்து ஆறுதல் கூறியும் வந்தார். அவருடன் மாவட்டச் செயலாளர்  கோ.நீலமேகம், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கே. பக்கிரிசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் கலைச் செல்வி, அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் நம்பிராஜன் மற்றும் கே.முனியாண்டி உடன் சென்றனர்.

 

;