tamilnadu

img

சென்னையில் மழைநீர் தேங்காமல் தடுக்க 14 பேர் கொண்ட நிபுணர் குழு - தமிழக அரசு

சென்னையில் மழைநீர் தேங்காத வகையில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் 14 பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே நேற்று முன்தினம் கரையைக் கடந்தது. இதன் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இரு தினங்களுக்கு முன்பு பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்தது. இந்த கனமழை காரணமாகச் சென்னை முழுவதும் ஆங்காங்கே மழைநீர் தேங்கி பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

கடந்த 2015 ஆம் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பிறகு, தமிழ்நாடு அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கையால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் வடிகால் பாதைகள் மற்றும் தேங்கிய நீர்களை வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், 2015 ஆம் ஆண்டு வெள்ளத்திற்குப் பிறகு ஏற்பட்ட வர்தா புயல், நிவர் புயல் தாக்கத்தால் தொடர்ந்து சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள நீர்கள் தொடர்ந்து சூழ்ந்து வருகிறது. 

இந்நிலையில், சென்னையில் மழைநீர் தேங்கி நிற்பதைத் தடுக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் 14 பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த குழுவில், நகரம் மற்றும் நாட்டு திட்டமிடல் அமைப்பின் தலைமை திட்டமிடல் அதிகாரி, காலநிலை பின்னடைவு நடைமுறை உலக வள நிறுவனத்தின் இயக்குநர், மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் பேராசிரியர் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர். 

சென்னையில் எங்கெங்கு மழைநீர் தேங்குகிறது, அதை அகற்றும் வழி என்ன என்பது பற்றி இந்த வல்லுநர் குழு ஆராய்ந்து, அரசிற்கு அறிக்கை அளிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

;