tamilnadu

img

ஒப்பந்த செவிலியர்கள் 1,212 பேர் பணி நிரந்தரம்....

சென்னை:
தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்கி தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த 2015-16ம் ஆண்டுகளில் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,212 செவிலியர்கள் அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகளில் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் அனைவரும் ஒப்பந்தம் அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு இருந்தனர். இவர்களுக்கான சம்பளமும் மிகக்குறைவு. இவர்களது ஒப்பந்த காலம் மே 5 அன்று முடிவடைகிறது.தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலால் மருத்துவ பணியாளர்களின் தேவை அதிகரித்துள்ளது.  தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று செவிலியர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனால் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த 1,212 செவிலியர்களையும் நிரந்தர பணி நியமனம் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டு அதற்கான உத்தரவு அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தங்களுக்கு வழங்கப்பட்ட நிரந்தர பணி ஆணையுடன் செவிலியர்கள் அனைவரும் மே 10 ஆம் தேதிக்குள் சென்னைக்கு வர வேண்டும். பின்னர், தேவை அடிப்படையில் தமிழகத்தின் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.நிரந்தர பணிக்கு மாற்றப்பட்ட 1,212 செவிலியர்கள் சென்னையில் கொரோனா பணியில் ஈடுபடவுள்ளனர். பின்னர் தங்களது மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதுவரை 15 ஆயிரம் சம்பளம் பெற்று வந்த செவிலியர்களுக்கு இனி ரூ.40 ஆயிரம் ஊதியம் கிடைக்கும் என்றும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஒப்பந்தப் பணியாளர்களாக இருந்த தங்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றிய தமிழக அரசுக்கு செவிலியர்கள்   நன்றியை தெரிவித்துள்ளனர்.

மு.க.ஸ்டாலினுக்கு செவிலியர்கள் நன்றி
புதிதாக பொறுப்பேற்க உள்ள தமிழக அரசு, செவிலியர்களை பணிநிரந்தரம் செய்து ஆணை வழங்கியதை தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் பொதுச் செயலாளர் நே.சுபின் வரவேற்று, நன்றி தெரிவித்துள்ளார். 

தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள அவர், “தேர்தலில் வெற்றிபெற்றவுடன், கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைப் பணியை அர்ப்பணிப்புடன் செய்து கொண்டிருக்கும் எங்கள் செவிலியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உயர்மட்டக்குழுவை அமைத்து, கோரிக்கையை நிறைவேற்ற மேற்கொண்ட நடவடிக்கைக்கு நன்றி. ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களை முதற்கட்டமாக 1212 பேரை பணிநிரந்தரம் செய்து ஆணை வழங்கியதை வரவேற்கிறோம். மேலும் இதுபோன்று ஒப்பந்த முறையில் பணிசெய்யும் செவிலியர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்வோம் என்ற வாக்குறுதிப்படி தமிழகத்தின் புதிய முதல்வர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையுடன், அரசின் நோய்த்தடுப்பு மற்றும் அனைத்து சுகாதாரத் திட்டங்களையும் வெற்றிகரமாக செயல்படுத்த செவிலியர்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

;