tamilnadu

img

பாட்டாளி மக்களின் உயிர்த்துடிப்புமிக்க இயக்கம் உங்களை வரவேற்கிறது... சிவகங்கை மாவட்ட நிகழ்ச்சியில் கே.சாமுவேல் ராஜ் பேச்சு....

சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் பாட்டாளிவர்க்க மக்களின் குரலை இடைவிடாது ஒலித்துக் கொண்டிருக்கும் உயிர்த் துடிப்புமிக்க இயக்கமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திகழ்கிறது என்பதைபறைசாற்றும் விதமாக ஆகஸ்ட் 2 அன்று சிவகங்கை நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி அமைந்திருந்தது. 

பிற இயக்கங்களைச் சேர்ந்த 210 பேர்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்து கொண்ட நிகழ்வு அது. அவர்களில் 50 பேர் பெண் தோழர்கள். அனைவரும் சிவகங்கை, காளையார் கோவில் ஒன்றிய கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்தவர்கள். கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.வீரபாண்டி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 210 பேரும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்கு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் முன்னிலையிலும் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் சாமுவேல்ராஜ் செந்துண்டு அணிவித்து வரவேற்றார். அப்போது பேசிய அவர், “சிவகங்கை மாவட்டத்தில் விடுதலை போராட்ட வரலாற்றுக்கு சொந்தக்காரரான வேலுநாச்சியார், குயிலி, மருது சகோதரர்களின் வாரிசுகளாக, மண்ணையும் வளங்களையும் காப்பதில் முன்னின்று போராடுபவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள்; சிவகங்கை மண்ணில் மணல் கொள்ளையை தடுத்துநிறுத்திய பெருமை மிகு இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. சமூகத்தின் எந்தப் பகுதி மக்களாக இருந்தாலும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு வடிவம் கொடுத்து அனுதினமும் களத்தில் இறங்கி போராடும் கட்சி; தில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆறு மாதங்களுக்கும் மேலாகஇடைவிடா போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நேரடியாக பங்கேற்றிட போராட்டக்களத்திற்கு புறப்பட்டு சென்றிருக் கிறார்கள். அதற்கு ஆதரவாக ஆகஸ்ட்9 அன்று சிவகங்கை, காரைக்குடி ஆகிய இரு மையங்களில் மாபெரும்மனிதச்சங்கிலி இயக்கம் நடைபெறு கிறது. அதில் புதிய தோழர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார். கட்சியின் மாவட்டச் செயலாளர் கே. வீரபாண்டி பேசுகையில், விவசாயபூமியான சிவகங்கையில் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் விதமாககடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் குடிமராமத்து பணிகளில் நடந்துள்ள ஊழல்களை விசாரிக்க வேண்டும்.

விவசாய கூட்டுறவு கடன் தள்ளுபடி மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக பலன் பெற்ற விவசாயிகளின் பெயர்பட்டியலை வெளியிட வேண்டும்; பயிர்க் காப்பீடு உடனடியாக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்டக் கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்தார்.  நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.கே.தண்டியப்பன், எஸ்.முத்துராமலிங்க பூபதி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் சாந்தி, விஸ்வநாதன், அண்ணாதுரை, கலையரசன், சாத்தப்பன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மோகன், கருப்புசாமி, அய்யம்பாண்டி, ஆறுமுகம், மாவட்டக்குழு உறுப்பினர் மணியம்மா, காளையார் கோவில் ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு, இளையான்குடி ஒன்றிய செயலாளர் அழகர்சாமி, மானாமதுரை ஒன்றிய செயலாளர் ஆண்டி, தேவக்கோட்டை தாலுகா செயலாளர் பொன்னுசாமி உட்பட மாவட்டக்குழு, இடைக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். 

;