புதுதில்லி,செப்.5- ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்க சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அமலாக்கத்துறை விசாரணைக்குச் செல்வதாக ப.சிதம்பரம் கூறிய நிலையில் சிறைக்கு அனுப்ப நீதிமன்றம் இந்த உத்தரவை அளித்துள்ளது. செப்டம்பர் 19 ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தை சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதை யடுத்து ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி யமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கடந்த 21 ஆம் தேதி கைது செய்தது. வியாழக் கிழமையுடன் சிபிஐ காவல் முடிவடை யும் நிலையில், ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்தது மற்றும் கைது ஆகிய சிபிஐ நட வடிக்கைகளுக்கு எதிராக ப.சிதம்பரம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கும் உச்சநீதிமன்றத்தில் வியாழனன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதனிடையே, சிபிஐ காவல் முடிந்து அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்ப தற்காக ப.சிதம்பரம் ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தார். அமலாக்கத்துறை வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் மறுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா அமர்வு வியாழ னன்று தீர்ப்பளித்தது. ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் கோரிக்கையை நிராகரித்துவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கு முன்ஜாமீன் வழங்குவதற்கு ஏற்ற வழக்கு அல்ல என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். பொருளாதார குற்றங்கள் மாறு பட்டவை என்பதால், அவற்றை மாறு பட்ட முறையில் அணுக வேண்டி யிருப்பதாகவும் நீதிபதிகள் குறிப் பிட்டுள்ளனர். வழக்கில் விசாரணை நடத்துவதற்கு, விசாரணை அமைப்புக்கு உரிய சுதந்திரம் உள்ளது என்றும், தொடக்க நிலை யிலேயே முன்ஜாமீன் வழங்குவது விசாரணைக்கு ஊறு விளைவிக்கும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். தேவையானால் விசாரணை நீதிமன்றத்தை அணுகி, ப.சிதம்பரம் ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்நிலையில் ப.சிதம்பரத்தை 14 நாள் சிறைக்காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.