tamilnadu

img

பம்ப் தலைநகர் கோவையின் நெருக்கடிக்கு யார் காரணம்? சிறு, குறு தொழில்களை அழித்த பாஜக.... கண்மூடித்தனமாக ஆதரிக்கும் அதிமுக.... சீத்தாராம் யெச்சூரி சாடல்....

கோயம்புத்தூர்:
தமிழக மக்களின் நலனுக்காக அதிமுக, பாஜக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்திற்காக கோவை வந்தயெச்சூரி கோவை காந்திபுரம் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் முதற்கட்ட பிரச்சாரத்திற்காக கோவை மற்றும் திருப்பூர் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள வந்துள்ளேன்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடு முழுவதும் மக்கள் விரோத பாஜகவின் கொள்கைகளை சமரசமின்றி எதிர்த்துப் போராடி வருகிறது. பாஜகவின் கொள்கைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே  சிதைத்துவருகிறது. மக்கள் மீது தாங்க முடியாத அளவிற்கு சுமைகளை ஏற்றி வருகிறது.பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலை பெரும்பாலும் நாள்தோறும் உயர்ந்து கொண்டே வருகிறது. வரியின் மூலம் திரட்டப்படும் லட்சக்கணக்கான கோடிகள் மோடியின் பாஜக பிரச்சாரத்திற்கு செலவிடப்படுகிறது.மோடி அரசின்  பொருளாதாரக் கொள்கைகள் இந்திய நாட்டின் சுயசார்பு பொருளாதாரத்தை சீர்குலைத்து வருகிறது.

நேர்மையற்ற முறையில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம்பெரும் கார்ப்பரேட்கள் உள்ளே வரவழைக்கப்படுகிறார்கள். பொதுத்துறைநிறுவனங்கள் தேசியமயமாக்கப் பட்டதின் நோக்கத்தையே பாஜக அரசு  சிதைக்கிறது. பெரிய கார்ப்பரேட்கள் மேலும் பெரும் கார்ப்பரேட்கள் உருவாக்குவதற்காகவே இந்த கொள்கைகளை திட்டமிடுகிறார்கள். நாடு தற்போதுமிகப்பெரிய பொருளாதார ஏற்றத்தாழ்வை நோக்கிச்செல்கிறது.  தற்போது கடந்த வருடம்  கொரோனா காரணமாக இந்தியாவில் 15 கோடி பேர் வேலை  மற்றும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.இந்த நிலையிலும் நம்நாட்டில் கோடீஸ்வரர்கள் மிகப்பெரிய வளர்ச்சி யடைந்துள்ளனர். உலகில் உள்ள பெரும் பணக்காரர்களை விட இந்தியாவில் உள்ள பணக்காரர்களின் வளர்ச்சி இந்த கொரோனா காலத்திலும் அபரிமிதமாக அதிகரித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில நண்பர்களின் வளர்ச்சிக்காகவே மோடி அரசு திட்டமிடுகிறது. அவர்கள் யாரென்று உங்களுக்கே தெரியும். அதற்காக இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை தவிர மற்ற தொழில் நிறுவனங்கள் சிதைக்கப்படுகின்றன.  குறிப்பாக சிறுகுறு தொழில்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன.

கோவை மாவட்டத்திற்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறேன். பம்ப் உற்பத்தியின் தலைநகரமாக கோயம்புத்தூர் திகழ்கிறது. ஆனால்இன்று இந்த துறை மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து வருகிறது.கடந்த மூன்று மாதங்களாக விவசாயிகள் தலைநகர் தில்லியின் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளையும்  சாலைகளையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். எங்கள் மீது திணித்த விவசாயிகளுக்கு விரோதமான சட்டத்தைதிரும்பப்பெறுங்கள் என்று மட்டும்தான் விவசாயிகள் கேட்கிறார்கள். விவசாயிகளின் கோரிக்கை மிக சாதாரணமானது, நியாயமானது. ஆனால் இதனைக்கூட செவிசாய்க்க முடியாத  அரசாக மோடி அரசு உள்ளது. விவசாயிகள் மாற்றத்தை எதிர்க்கவில்லை. விவசாயிகளோடு பேசுங்கள், நாடாளுமன்றத்தில் முறையாக விவாதித்து தேவையான திருத்தங்களோடு இந்த சட்டங்களை கொண்டு வாருங்கள் என்றுதான்கேட்கிறார்கள். இது மிக நியாயமானகோரிக்கையாகும். ஆனால் பிடிவாதம் பிடிக்கிறது மத்திய அரசு. இந்த போராட்டக் களத்திலேயே  சுமார்300க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர். ஆனால் இந்த அரசு இவ்விவகாரத்தில் எவ்விதமான அக்கறையும் செலுத்தவில்லை.நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. 15 கோடி பேர் வேலையிழந்திருக்கின்றனர். இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து எந்தக் கவலையும் படாத பாஜக அரசு வகுப்புவாத அணிதிரட்டலில் கவனம் செலுத்துகிறார்கள். இது இந்தியாவின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் நடவடிக்கைகளாகும்.  இதேபோன்று மத்திய அரசு கூட்டாட்சி நடைமுறையையே சீர்குலைத்து,  மாநில அரசுகளின் உரிமைகளில்தலையிடுகிறது. மாநிலங்களின் கல்வி மற்றும் மொழிக்கொள்கையில் தலையிட்டு கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கின்றனர். . இந்தியஅரசியலமைப்பின் அடிப்படையையே தகர்க்க முயற்சிக்கின்றனர். 

                                    ***************

மனித உரிமை செயல்பாட்டாளர்களை உச்சநீதிமன்றம் விடுவிக்க வேண்டும்

மத்திய அரசை யார் விமர்சித்தாலும், தேசத்துரோக வழக்கு பாய்கிறது. இறுதியாக தற்போது உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு மாற்றுக் கருத்து தெரிவிப்பது தேசத்துரோகம்  அல்ல என தெரிவித்திருக்கிறது. இதே உச்சநீதிமன்றத்திற்கு தெரியும்,  மோடி அரசு இதுவரை ஏராளமான தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு பலரை சிறையில் அடைத்திருக்கிறது. புரட்சிகர எழுத்தாளர் சங்கத்தின் மூத்த நிர்வாகியான வரவர ராவ், மனித உரிமை செயல்பாட்டாளருமான சுதா பரத்வாஜ், சிவில் உரிமைகள் செயல்பாட்டாளர் கவுதம் நவ்லங்கா உள்ளிட்ட பலர்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் மீது இதுவரை   என்ஐஏ  எந்த குற்றப்பத்திரிக்கையையும்  தாக்கல் செய்யவில்லை. துன்புறுத்தும் நோக்கத்திலேயே இந்த ஊபா சட்டம் பாய்ந்துள்ளது. 83 வயதான ஸ்டேன்சுவாமியைக்கூட இவர்கள் சிறையில் வைத்துள்ளனர். அவர்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை ரத்து செய்து சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களை உடனே உச்சநீதிமன்றம் விடுவிக்க வேண்டும். எதேச்சதிகார முறையில் மோடி அரசு நடந்து வருவது தடுக்கப்பட வேண்டும்.

                                    ***************

மாநில உரிமைகளை பாதுகாக்கும் பாரம்பரியம்

தலித்துகள், சிறுபான்மையினர், பழங்குடியினர் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுகிறது. குறிவைக்கப்படுகிறார்கள். இது நாட்டின் தற்போதைய முக்கியப் பிரச்சனையாகும். தேர்தலில் இவ் விவகாரம் எதிரொலிக்கும். மத்திய அரசின் எல்லா கொள்கைகளையும் மாநிலத்தில் உள்ள அதிமுக அரசு கண்மூடித்தனமாக ஆதரிக்கிறது. மாநில உரிமைகளுக்காக போராடிய மிகப்பெரிய பாரம்பரியம் தமிழகத்திற்கு உண்டு.   ஆனால் இன்று கூட்டாட்சியின் அடிப்படையை தகர்க்கும் ஒவ்வொரு கொள்கையையும் அதிமுக நாடாளுமன்றத்தில் ஆதரித்து வருகிறது.  வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட தொழில் கொள்கைகளையும், மதரீதியான பிரிவினைக் கொள்கைகளையும் ஆதரித்து வருகிறது. இதனைஏற்க முடியாது. இதனால்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி இந்த தேர்தலில் அதிமுக,பாஜக கூட்டணியை நிராகரிப்போம் என்கிற முழக்கத்தை முன்வைத்துள்ளோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவின் அணியில் உள்ளோம். மதவாத பாஜகவை வீழ்த்த,மாநில உரிமைகளை பறிகொடுக்கும்அதிமுக அணிகளை வீழ்த்திட திமுகவிற்கு  அனைத்து சக்திகளையும் ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அனைவரையும் பரந்தமனப்பான்மையுடன் திமுக ஒருங்கிணைத்துச் செல்ல வேண்டும்.   இதுபோன்ற செயல்களால்தான் அதிமுக,பாஜக அணிகளை வீழ்த்த முடியும்.இந்திய மக்களின் நலனுக்காகவும்,தமிழக மக்களின் நலனுக்காகவும் அதிமுக, பாஜக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும்.

மார்ச் 8 முதல் ஏப்ரல் 8 ஆம் தேதிவரை நாடாளுமன்ற கூட்டத்தொடர் என அறிவித்துள்ளார்கள். தேர்தல் நடைபெறும் இந்த  ஐந்து மாநிலங்களிலும் பாஜகவிற்கு எதிரான அதிகஎம்பிக்கள் உள்ள மாநிலங்களாகும். இந்த நேரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்தினால் எப்படி சரியானதாக இருக்கும்? இதுகுறித்து இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள்.  முக்கியமான  பட்ஜெட் விவாதங்களை மட்டும் தற்போது நடத்திவிட்டு நாடாளுமன்ற கூட்டத்தை ஒத்திவைக்க சொல்லி எங்கள் எம்பிக்கள் வலியுறுத்துவார்கள் என்றார்.இந்த பேட்டியின் போது மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், கோவை நாடாளுமன்றஉறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட்டச் செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

                                    ***************

தேர்தல் ஆணையம் பாஜகவிற்கு உதவுகிறது

தேர்தல் ஆணையம் இன்று சுயேச்சையான அமைப்பாக செயல்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. காரணம் பாஜகவிற்கு வசதியாக மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும், அசாமில் 3 கட்டங்களாகவும் தேர்தலை நடத்துகிறது. மற்ற மாநிலங்களில் மட்டும் ஒரே கட்டமாக தேர்தலை அறிவிக்கிறது.  அதே போல் நேற்றைக்கு முன்தினம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இன்று ஒவ்வொரு பெட்ரோல் பங்குகளிலும் பிரதமர் நரேந்திர மோடி சிரித்தவாறு நிற்கிறார். அது தேர்தல் விதிமுறைகளை மீறுகிறது என்றும் அதனை மூடி மறைக்கவேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. இவ்வளவு காலமும் இல்லாத நடைமுறை இப்போது வருகிறது. ஏன் என்றால் பெட்ரோல் விலை ஏறுகிறது. மோடி சிரித்தவாறு நிற்கிறார். மக்கள் உண்மையைப் புரிந்து கொள்வார்கள் என்று மோடியை மூடி மறைக்கிறது தேர்தல் ஆணையம். தேர்தல்ஆணையத்தின் ஒரே வேலை பாஜகவிற்கு உதவுவதுதான். தேர்தல் ஆணையம் சுயேச்சையான அமைப்பு என்ற தன்மையை இழந்து நிற்கிறது.

                                    *************** 

தலைமை நீதிபதி பதவி விலக வேண்டும்

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஏஸ்.ஏ. பாட்டே பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையில் சமீபகாலமாக தெரிவித்து வரும்கருத்துகள் துரதிஷ்டவசமானது. அதன் காரணமாகவே இன்று நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உரிமை ஆர்வலர்கள், முற்போக்கு குழுக்கள், அக்கறையுள்ள குடிமக்கள் அடங்கிய குழு வெளிப்படையான பகிரங்கக் கடிதம் ஒன்றை தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ளது. அதில்  உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்ற பதவியின் உயர்ந்தபீடத்திலிருந்து நீங்கள் ‘நீதி என்பது இந்தியாவில் பெண்களுக்கான அரசியலமைப்பு உரிமை அல்ல’ என்ற செய்தியை மற்ற நீதிமன்றங்கள், நீதிபதிகள், காவல்துறை மற்றும் பிற சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு அனுப்பி வைப்பதாகவே உங்களுடைய வார்த்தைகள் இருக்கின்றன. உங்களுடைய வார்த்தைகள் சிறுமிகளை, பெண்களை மேலும் மௌனமாக்கிடவே வழிவகுத்துக் கொடுக்கும். அவர்களுடைய மௌனத்தை உடைக்க பல ஆண்டு காலம் ஆகும். உங்களுடையவார்த்தைகள் திருமணம் என்பது பாலியல் பலாத்காரத்திற்கான உரிமம்என்ற செய்தியையே பாலியல் பலாத்காரத்தை செய்பவர்களுக்கு அனுப்பி வைக்கிறது; அத்தகைய உரிமத்தைப் பெறுவதன் மூலம், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்கள் தங்களுடைய செயலை நியாயப்படுத்தவும் சட்டப்பூர்வமாக்கவும் முடியும்.2021 மார்ச் 01 அன்று நீங்கள் நீதிமன்றத்தில் கூறிய வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, இந்த தேசத்தின் பெண்களிடம் மன்னிப்புக்கேட்கவும் வேண்டும். ஒரு கணம் தாமதமின்றி இந்திய தலைமைநீதிபதி என்ற பதவியில் இருந்து நீங்கள் விலகிடுவதே நேர்மையான செயலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இது சரியானது. இதில் நாங்கள் முழுமையாக உடன்படுகிறோம். 

படக்குறிப்பு :

கோவையில் சீத்தாராம் யெச்சூரி பிரச்சாரம்... 

தமிழகத்தில் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வியாழனன்று துவக்கினார். கோயம்புத்தூரில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். இக்கூட்டத்தில் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவரும், கோவை நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன், மாவட்டச் செயலாளர்  வி.ராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.பத்மநாபன், என்.அமிர்தம், ஏ.ராதிகா மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்குழு செயலாளர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கோவையைத் தொடர்ந்து வியாழனன்று இரவு திருப்பூரில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி உரையாற்றினார்.

குறிப்பு : இந்த செய்தி தொகுப்பு 1-ஆம் பக்கம் (இ பேப்பரில்) மற்றும் 5-ஆம் பக்கம் பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொகுப்பில் ஒரே தொகுப்பாக தொகுக்கப்பட்டுள்ளது.   

;