tamilnadu

img

சாக்கடைக்குள் மனிதர்களை இறக்கி சுத்தம் செய்யும் மாநகராட்சி கவனத்திற்கு

கோவையில் சட்டத்தை மீறி மனிதர்களை சாக்கடைக்குள் இறக்கி சுத்தம் செய்யும் பணி வெளிப்படையாக நடைபெற்று வருகிறது.
மனித கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்த தடை விதித்து ஒன்றிய அரசு கடந்த 2013ம் ஆண்டு சட்டம் இயற்றி உள்ளது. அதேபோல் தமிழக அரசும் கடந்த 2015ம் ஆண்டு கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்த தடை விதித்து அரசாணை பிறப்பித்துள்ளது.  அதே சமயம் உச்சநீதிமன்றம் இதுகுறித்த வழக்கு ஒன்றில் சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆனபோதிலும் சாதிய பாகுபாடுகள் தொடர்கின்றன. எந்த நாடும் தங்கள் குடிமக்களை தெரிந்தே சவக்குழிக்குள் அனுப்புவதில்லை. இயந்திரங்கள் மூலம்  கழிவுகளை அகற்றுவதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதேபோல் சென்னை உயர்நீதிமன்றம் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவது மனிதத்தன்மையற்ற செயல் என்ற உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் சாக்கடைகளை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் இயந்திரங்களை பயன்படுத்தாமல் மனிதர்களை சாக்கடைக்குள் இறங்கி ஆபத்தான நிலையில் சாக்கடைகள் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து மனிதர்கள் சாக்கடைக்குள் இறங்குவதை தடுத்து இயந்திரங்களை பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஐந்தாண்டுகளில்,உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 51 பேரும், தமிழகத்தில் 48 பேரும்  கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியின் போது  உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

;