tamilnadu

img

ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க தீவிர நடவடிக்கை: கோவை ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் உறுதி

கோவை, மே. 13 - கோவையில் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற வனத்துறை மற்றும் உணவுத்துறை அமைச்சர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக உறுதியளித்தனர்.

கோவை ஆவரம்பாளைம் கோ-இந்தியா தொழில்துறை சங்கத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கொரோனா  இரண்டாவது அலை அதிகளவில் பரவி வரும் நிலையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் பங்கேற்றனர். கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்நடராஜன், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் ஆலோசனை கூட்டத்தில் பேசுகையில், எதிர்கட்சி ஆளும் கட்சி என்று இல்லாமல் மக்களுக்கு இந்த ஆய்வு கூட்டத்தை நடத்தி வருகிறோம். கொரோனா நோய்த்தொற்றில் கோவை இரண்டாவது மாவட்டமாக உள்ளது. தமிழகத்திற்கு முன்பு கிடைத்ததை விட கூடுதலாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நமக்கு ஆக்சிசன் வாங்கி கொடுத்துள்ளார். மக்களின் உயிர்களை காப்பாற்ற இந்த அரசு பாடுபடுகிறது. இதில் எதிர்கட்சி சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வைக்கும் கோரிக்கைகளையும் ஏற்போம் என்றார்.

இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் தொழில்துறையின் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர். தனியார் மருத்துவமனைகள் ஆக்சிசன் தேவைகள் குறித்து கேட்டனர். தற்போது நிலவி வரும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, ரெம்டிஸ்வர் மருந்து, சிகிச்சைகான படுக்கை வசதி, மருத்துவ வசதி உள்ளிட்டவைகளை அதிகப்படுத்த வேண்டும். இந்த ஊரடங்கு காலத்தில் வங்கிகள் கடன்களை கட்ட நிர்பந்தம் செய்யாமல் தவனை காலத்தை நீட்டித்து வழங்க வேண்டும்.  கொரோனா ஊரடங்கு காரணத்தால் உணவில்லாதவர்களுக்கு உதவும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். ஆக்சிசன் பற்றாக்குறை முக்கியமான பிரச்சனையாக உள்ளது எனவும் தினசரி கொரோனா பாதிப்பு கோவையில் 2600 ஐ கடந்துள்ளது. படுக்கைகள் கூடுதலாக எடுக்க வேண்டும் மற்றும் தடுப்பூசி அதிகமாக போட வேண்டும். மத்திய அரசிடம் இருந்து கூடுதலாக தடுப்பூசிகள் வாங்க வேண்டும் என்றனர். இதேபோன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி, ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் பேசுகையில், அம்மா உணவகத்தை தொடர்ந்து நடத்த வேண்டும். திமுக அமைச்சர்கள்  நல்ல அனுபவங்கள் கொண்டவர்கள் சிறப்பாக பணி ஆற்றுவார்கள். முழு ஒத்துழைப்பு கொடுப்போம். கூடுதலாக ஆம்புலன்ஸ் நமக்கு தேவைப்படுகிறது. கொரோனா கிராமங்களில் அதிகமாக பரவி வருகிறது என்றார் மக்களை காப்பற்றும் எடுக்க கூடிய உங்களுடைய நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம் என தெரிவித்தனர்.

 

இதனையடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசுகையில், 

இங்கே பேசிய சிலர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதால் படுக்கைகளின் எண்ணிக்கையை குறைப்பதாக பேசினார்கள். இதனை ஒருபோதும் ஏற்க முடியாது. இதற்கான எந்த உரிமையும் இவர்களுக்கு கிடையாது. தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிற நிலையில் படுக்கையின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது குறித்துத்தான் இப்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். அப்படி அரசின் விதிகளுக்கு மாறாக படுக்கைகளின் எண்ணிக்கையை குறைத்தாலோ, அரசின் விதிகளுக்கு மாறகா செயல்பட்டாலோ அந்த தனியார் மருத்துவமனையை அரசே முழுமையாக கையகப்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கையை மாவட்ட ஆட்சித்தலைவர் மேற்கொள்ள வேண்டும். அதேநேரத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்குவதற்கு அரசின் தரப்பில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதேபோல நமது தகுதியும் திறமையும் வாய்ந்த கோவை தொழில்முனைவோர்கள் வணிக ஆக்சிஜனை மருத்துவ பயன்பாட்டிற்கான ஆக்சிஜனாக மாற்றி உற்பத்தி செய்து மருத்துவமனைகளுக்கு வழங்கும் பணியை தொழில்துறையினர் முனைபோடு செயல்படுத்த வேண்டுகிறேன். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக நடைமுறை படுத்தப்படவில்லை. காவல்துறையினர் சிறிது கெடுபிடி காட்டி ஊரடங்கை வெற்கரமாக்கிட வேண்டும். இவையனைத்தும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உதவும். அதேபோன்று திருப்பூரில் தொழில்முனைவோர்கள் வெளிநாட்டு ஆர்டர்கள் இருந்தாலும் பரவாயில்லை நாங்கள் முழுமையான ஊரடங்கை கடைபிடிக்க இருக்கிறோம் என அறிவித்துள்ளார்கள். இதனை கோவை தொழில்முனைவோர்கள் பரிசீலனை செய்ய வேண்டுகிறேன். தனியார் மருத்துவமனைகள் அவசியமற்ற மருந்துகளை பரிந்துரைப்பதை கைவிட வேண்டும். இதன்காரணமாக செயற்கையாக தட்டுப்பாடு மற்றும் பதட்டத்தை ஏற்படுத்துகிறது. இதனை உயர் மருத்துவர்கள்  கண்காணிக்க வேண்டும். தமிழகத்திற்கு தேவையான அளவிற்கு தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும். அதற்கான நிர்பந்தத்தை அனைவரும் ஒன்றினைந்து குரல் எழுப்ப வேண்டும். முதலமைச்சர் நிவராண நிதிக்கு கோவையில் உள்ள தொழில்முனைவோர்கள் தாரளமான நிதியை அளிக்க வேண்டும். ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்றில்லாமல் ஒன்றுபட்டு கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்போம் என முதலமைச்சர் அறிவித்த அடுத்த நாளே நமது மாவட்டத்தில் அனைவரும் ஒன்றினைந்து இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளோம். இத்தகைய ஒற்றுமையோடு நமது மக்களை பாதுகாக்க போரிடுவோம் என்றார்.

ஆலோசனை கூட்டத்தின் நிறைவாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி  ஆலோசனை கூட்டத்தில் பேசுகையில், கொரோனா இரண்டாவது அலை மிக கொடூரமாக உள்ளது. ஊரடங்கு அறிவிப்பு என்பது  அனைத்து தரப்பின் கருத்துகளை கேட்டு தான் முதலமைச்சர் அறிவித்தார். தமிழகத்திற்கு மத்திய அரசிடம் இருந்து  219 கேல் ஆக்சிசன் கிடைத்ததிலிருந்து, தற்போது 419 கேல் ஆக்சிசன் அதிகரித்து வாங்கியுள்ளார் முதலமைச்சர்.  தூத்துக்குடி ஸ்டெர்லைட் தயாரகும் ஆக்சிசன் கோவை மாவட்டத்திற்கு வரவுள்ளது. பின்னார் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டமான கோவையை ஆய்வு செய்வதற்கு சுகாதரத்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் வருகை தருகின்றனர்.  கோவைக்கு உடனடியாக ஆக்சிஜன் தேவை என்பதும் கூடுதலாக படுக்கை உண்டாக்க வேண்டும் என்பதும் முக்கியம்.  ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர் கட்சியாக இருந்தாலும் சரி தமிழகத்தின் வளர்ச்சிக்கு  ஒன்றுபட்டு பணி செய்வோம் என்றார்.

முன்னதாக இந்த கூட்டத்தில் கோவை மாநகராட்சி ஆணையர் குமரவேல் பாண்டியன், கோவை அரசு மருத்தவமனை முதல்வர் நிர்மலா, ஈஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் மற்றும் உயர் காவல் அதிகாரிகள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

;