tamilnadu

img

தமிழ்நாட்டிற்கு தேவையான தடுப்பூசிகளை தாமதமின்றி வழங்கிடுக... மத்திய அரசுக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி., வலியுறுத்தல்....

 கோவை:
கொரோனா தடுப்பூசி செலுத்த தமிழ்நாட்டு மக்கள் ஆர்வம் செலுத்தி வருகிற நிலையில் தேவைக்கேற்ப மத்திய அரசு தடுப்பூசிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்காமல் இருப்பது ஏற்புடையதல்ல. தமிழ்நாடு முதலமைச்சர் கேட்ட எண்ணிக்கை யில் தடுப்பூசிகளை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்றுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தி யுள்ளார்.  கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை கோவை மாவட்டத்தில் தீவிரமாக பரவி வந்தது. இதனை கட்டுக்குள் கொண்டுவரு வதற்கு மாவட்ட நிர்வாகம் தீவிரமான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. சுகாதாரத்துறை ஊழியர் களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற 20 நாட்களுக்குள் கோவை மாவட்டத்திற்கு இரண்டு முறை பயணம் செய்து பணிகளை முடுக்கிவிட்டார்.

இதேபோன்று உணவுத்துறை அமைச்சர், வனத்துறை அமைச்சர்  கோவை மாவட்டத்திலேயே தங்கிப் பணியாற்றி வருகின்றனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தொடர்ந்து அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை வழங்குவதும்,  பொதுமக்களிடம் இருந்து வருகிற கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குகொண்டு சென்று தீர்வுகாண்பது உள்ளிட்ட களப்பணிகளை மேற்கொண்டு வருகின்றார். இதன் ஒருபகுதியாக வெள்ளிக்கிழமையன்று கோவை சித்தாபுதூர், மசக்காளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்டார். மேலும் அங்கு பணியாற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உற்சாக மூட்டினார்.

முன்னதாக அவர் கூறுகையில், தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் மிகுந்த ஆர்வத்தை காட்டி வருகின்றனர். எங்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று கோவை மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டம் கூட நடைபெறும் வகையில் தடுப்பூசி செலுத்த மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. ஆனால் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு தர மறுக்கிறது. தமிழகத்தை காட்டிலும் மக்கள் தொகை குறைவாக உள்ள பாஜக ஆளும் மாநிலங்களுக்கு தடுப்பூசிகளின் எண்ணிக்கை அதிகரித்து வழங்குகிறார்கள்.  ஆனால் தமிழகத்திற்கு குறைந்த அளவே தடுப்பூசி வழங்குகிறது.  மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை புறக்கணித்து பாரபட்சத்தோடு நடக்கிறது.அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவோம் என  பிரதமர் தம்பட்டம் அடித்தால் மட்டும் போதாது. அதகான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள பாஜக தலைவர்கள் மாநில திமுக அரசை குறைகூறுவதை விடுத்து, மத்திய அரசிடம் தமிழ்நாட்டின் கோரிக்கையை நிறைவேற்ற குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

கோவை இஎஸ்ஐ மருத்துவமனை யில் எச்எம்எஸ் தொழிற்சங்கத்தின் சார்பில் மருத்துவத்துறை ஊழியர்களுக்கு ஆயிரம் பாட்டில் குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதனை  கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கிவைத்தார். எச்எம்எஸ் சங்கத்தின் தலைவர் ராஜமாணி முன்னிலை வகித்தார்.  இதில், இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்ஆர்.வேலுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;