tamilnadu

img

ஊன்று கோலால் ஊடகவியலாளரை தாக்கிய கமலஹாசன் - பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டம்

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல் வருகையை வீடியோ எடுத்துக்கொண்டிருந்த சன் தொலைக்காட்சி நிருபரை ஊன்று கோலை கொண்டு தாக்கிய கமலஹாசனின் செயல் ஊடகவியலாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இச்செயலுக்கு பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும்  நடிகர் என்கிற அவதாரத்தில் இருந்து கள எதார்த்தத்திற்கு திரும்புங்கள் எனவும் விமர்சித்துள்ளது.
இது குறித்து கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவர் மற்றும் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில், செய்திக்காகப் படம் எடுத்த சன் டிவி செய்தியாளர் மோகனை, கைத்தடியால் தாக்கிய மக்கள் நீதி மய்யம் தலைவரின் செயல் அராஜகத்தின் உச்சம். கமலஹாசனின் இந்த செயலுக்கு கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிற்கு முன்பிருந்தே, தொடர்ந்து கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் கோவையில் பணியாற்றும், செய்தியாளர்களும், ஒளிப்பதிவாளர்களும், எந்தவிதமான மாற்றுக்கருத்துமின்றி, செய்தியாகப் பதிவு செய்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில், புதனன்று காலை, கோவை அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எண்ணிக்கை மையத்தைப் பார்வையிட வந்த கமலை, செய்திக்காக, சன்டிவி மோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆனால் அவரைப் படம் எடுக்கக் கூடாது என மிரட்டும் நோக்கில், தனது கையிலிருந்த கைத்தடியால் கழுத்து பகுதியில் கமல் நெட்டித்தள்ளியிருக்கிறார். நல்வாய்ப்பாக இந்தத் தாக்குதலில் மோகனுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. என்ற போதும், ஒருவேளை கைத்தடியின் முனை தவறிப்போய்க் கழுத்தை பதம் பார்த்திருந்தால் நிலைமை விபரீதமாகியிருக்கும்.  இதெல்லாம் கமல் அறியாதவர் அல்ல என்றாலும், அவரது சினிமா பின்புலத்தில், நடிப்பாக அவர் பார்ப்பாரேயானால், அவருக்கு ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டும். இது உங்கள் நடிப்பல்ல, உயிர் தொடர்பான பிரச்சனை. செய்தியாளர் என்று தெரிந்திருந்தும், நீங்கள் இதைச் செய்திருப்பது, கோவை செய்தியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது சந்தர்ப்பவாதம் மற்றும் அதிகார போக்கின் உச்சக்கட்டம் என்றே கருத வேண்டியிருக்கிறது. நிச்சயம் இதற்கான சட்டரீதியான எதிர்வினையை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கும் அதே வேளையில், பொதுவாழ்விற்கு வந்துவிட்ட நீங்கள் முதலில் நடிகன் என்கிற அந்நிய உணர்வையும், விட்டொழித்துவிட்டு, கள யதார்த்தம் அறிந்தவராக மாற வேண்டும் என கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கேட்டுக்கொள்கிறது.  உங்களோடு நெருக்கமாகப் பணியாற்றி வந்த செய்தியாளரையே ஒரு நாளில் இப்படி தாக்கி அந்நியப்படுத்தும் நீங்கள், பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்வீர்கள் என்ற எண்ணம் மேலோங்குவதை தவிர்க்க முடியவில்லை. முதலில் குறைந்தபட்சம் நல்ல மனிதராக முயன்றுவிட்டு, அதன் பின்னர் உங்கள் அரசியலை முன்னெடுக்க வேண்டும் என, சக செய்தியாளர்கள் சார்பில் அறிவுறுத்துகிறோம். செய்தியாளர் மோகன் மீதான இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதோடு கமல் அவர்கள் வெளிப்படையாகவும், பகிரங்கமாகவும் மன்னிப்பு கோர வேண்டும் என, கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம், தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையம் ஆகிய பத்திரிகையாளர்கள் அமைப்புகளும்  கமலின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

;