tamilnadu

img

அதிமுக அரசு கொடுத்த போலி விளம்பரங்களின் சாயம் வெளுத்தது....

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி போலி விளம்பரங்களின் மூலம் தமிழகம்‌ வளர்ச்சி அடைந்து விட்டது என பக்கம்பக்கமாய் விளம்பரம் கொடுத்து நல்லாட்சி தந்தவர்போல பிம்பத்தை கட்ட முயன்றார். இதில் தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என ஒரு விளம்பரம் வந்தது. இது உண்மையில்லை என்பதை தமிழக மக்கள் உணர்ந்துள்ளனர். ஒரு பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத அவல‌நிலை ஏற்பட்டுள்ளது. முதல்வரின் பாதுகாப்புக்கு சென்ற ஐபிஎஸ் பெண் காவல்துறை அதிகாரிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காவல்துறையின் மிகப்பெரிய பொறுப்பில் உள்ள சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் இந்த குற்றச்சாட்டிற்கு உள்ளானவர். இந்த அதிகாரி மீது எடப்பாடி பழனிச்சாமி அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிப்ரவரி 21 ஆம் தேதி நடந்த சம்பவம், 22 ஆம் தேதி சென்னை காவல்துறை இயக்குநருக்கு புகார் தெரிவிக்க அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி காரில் செல்கிறார். பாதி வழியில் செங்கல்பட்டு எஸ்பி தலைமையில் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் கும்பலாக சுற்றி வளைத்து பெண் ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டுகின்றனர்.

இந்த அதிகாரிகள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாதர் சங்கத்தினரின் பெரும் போராட்டத்திற்குப் பிறகு தற்போதுதான் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். இத்தனை அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு நியாயத்திற்காக அந்த பெண் காவல் அதிகாரி புகார் அளித்துள்ளார். அவரின் இந்த துணிச்சலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனதார பாராட்டுகிறது.  இதனைக் கண்ட உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தானே முன்வந்து எடுத்துள்ளது. நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இந்த வழக்கு நடைபெறும் என தெரிவித்துள்ளது. ஐபிஎஸ் பெண் அதிகாரிக்கே இந்த நிலை என்றால் சாதாரண பெண்கள் நிலை என்ன என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடியும். பெண் காவலர்களுக்கு பாதுகாப்பு வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு நியாயம் வேண்டும் என கோவையில் மாதர் சங்க தலைவர்கள் மனு கொடுக்கச் சென்றவர்களை தடுத்து வழக்கு போட்டுள்ளது கோவை மாநகர காவல்துறை. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.  

பொள்ளாச்சி சம்பவத்தை அவ்வளவு எளிதாக கடந்து செல்ல முடியாது. அந்த சம்பவத்தில் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் மூன்று பேர் அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள். அந்த சம்பவத்தை வெளிக்கொணர்ந்தது மாதர் சங்கம். மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் தெருவில் இறங்கி போராடியபோது ஆளும் கட்சிக்கு எந்த தொடர்பும் இல்லை என அன்று கோவை மாவட்ட எஸ்பியாக இருந்த பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு வெளிப்படையாக பேட்டியளித்தார். இப்போது அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்களே, மேற்படி பாண்டியராஜன் எஸ்பி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். 

தற்போது தேர்தலில் வாக்குகளை பெறுவதற்கு வேட்டி, சேலை, பாத்திரங்கள் கோவை மாவட்டம் முழுவதும் அதிமுகவினர் மக்களுக்கு அளித்து வருகின்றனர். இனி பணமும் தருவார்கள். ஆனால் கோடிகோடியாக கொட்டிக்கொடுத்தாலும் அதிமுக ஒருபோதும் வெற்றிபெறாது. சிறு, குறு தொழில்களை அழித்த, மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும், மதவாதப் போக்குக்கு ஆதரவாக செயல்படும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.

கோவை பொதுக்கூட்டத்தில் சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதிலிருந்து...

;