tamilnadu

img

ஊழல் மணியான வேலுமணி..... 13 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு.... மு.க.ஸ்டாலின் சாடல்....

கோயம்புத்தூர்:
கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட தேவராயன்புரத்தில் சனியன்று மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று அப்பகுதி மக்களின் பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது, விவசாய பகுதியான தொண்டாமுத்தூர் பகுதியில் காட்டுப் பன்றியால் ஏற்படும் பிரச்சனை மற்றும் நீர்வளத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர். 

இதன்பின் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “தமிழகத்தில் கரப்சன், கலெக்சன் ஆட்சி நடைபெறுகிறது. குறிப்பாக, ஊராட்சிகளில் சுகாதாரப் பணிகளுக்காக வாங்கப்படும் உபகரணங்களில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளது. இதுகுறித்துகோவையை சேர்ந்த டேனியல் என்பவர் தகவல் அறியும் உரிமைசட்டம் மூலம் பெற்ற விவரத்தில், பினாயில், பிளிச்சிங் பவுடர் போன்றவை சந்தையில் விற்கிற விலையை காட்டிலும் பல மடங்கு அதிகமான விலை கொடுத்து வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இதன்படி பார்த்தால் ஒரு ஊராட்சியில் மட்டும் ஒருகோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்று இருக்கலாம். அந்த வகையில் பார்த்தால் தமிழகத்தில் 13 ஆயிரத்திற்கும் அதிகமான ஊராட்சிகள்  உள்ளன.இதன்மூலம் மட்டும் 13 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று இருக்கலாம். எனவே ஊழல் மணியான அமைச்சர் வேலுமணிக்கு உரிய பாடத்தை கற்பிக்க வேண்டும். அத்தகைய வாய்ப்பை வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார். 

இந்நிகழ்வில் திமுக பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ (மாநகர கிழக்கு), பையா கவுண்டர் (மாநகர மேற்கு), சி.ஆர்.ராமச்சந்திரன் (புறநகர் வடக்கு), தென்றல் செல்வராஜ் (புறநகர் தெற்கு), சேனாதிபதி (புறநகர் கிழக்கு) மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

தகராறு செய்த அதிமுக நிர்வாகி 
இதற்கிடையே, இந்த கூட்டத்தில் பங்கேற்ற பெண் ஒருவர்திடீரென எழுந்து மு.க.ஸ்டாலினிடம் வாக்குவாதம் செய்து தகறாரில் ஈடுபட்டார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் அவரை அங்கிருந்து வெளியேற்றினர். இதன்பின் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் அதிமுக மகளிர் அணியின் தெற்கு மாவட்ட துணைத் தலைவர் பூங்கொடி (40) என்பது தெரியவந்தது.  இதனைத் தொடர்ந்து  கிராம சபை கூட்டத்தின் நிறைவில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், கிராம சபை கூட்டத்தின் இடையில் ஒரு சகோதரி் திமுக தொப்பி அணிந்து கொண்டு வந்து  கலவரம் செய்ய  முயன்றார் எனவும்,  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அந்த பெண்ணை அனுப்பி இருக்கின்றார் என குற்றம் சாட்டினார். 

;